விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை மாலை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஆலையின் ஃபோர்மேனை கைதுசெய்த போலீஸார் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லியை அடுத்துள்ள வேண்டுராயபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை சிவகாசி, தேவர் தெருவைச் சேர்ந்த வைரமுத்துகுமார் (45) நடத்தி வருகிறார். இதில் சுமார் 150 பேர் வேலை செய்து வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஓர் அறையில் வேலையை முடித்துவிட்டு மணி மருந்தை ஒதுக்கும்போது உராய்வு ஏற்பட்டு, வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் வேலை செய்து கொண்டிருந்த திருத்தங்கல், விக்டர் மகன் முனியசாமி (30), அல்போன்ஸ் (55) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த கூமாப்பட்டி, துரைச்சாமி மகன் கோவிந்தபாபு (19) பலத்த காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
விபத்து குறித்து மல்லி காவல் நிலையத்தில், வேண்டுராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்மாயன் புகார் செய்தார். புகாரில், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயன மூலப் பொருள்கள் எளிதில் தீப்பற்றக் கூடியதும், வெடிக்கக் கூடியதும் என்று தெரிந்தும் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தேவையான வெடி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இதில் ஆலை உரிமையாளர் வைரமுத்துகுமார், ஃபோர்மேன் ராஜசேகர் ஆகியோர் அஜாக்கிரதையாக நடந்து கொண்டுள்ளனர். அதனால் வெடி பொருள்கள் உராய்ந்து தீப்பற்றி வெடித்து சிதறி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஃபோர்மேன் ராஜசேகரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் வைரமுத்துகுமாரைத் தேடி வருகின்றனர்.