காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பைக் கருதி, அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 983 கன அடியாக இருந்தது. வியாழக்கிழமை காலை நீர்வரத்து நொடிக்கு 4,141 கன அடியாக அதிகரித்தது.
இதனால், வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 43.08 அடியாக இருந்தது. குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்இருப்பு 13.73 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து இதே நிலையில் இருந்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு கடந்த சில தினங்களாக குறைந்ததால் அருவிகளில் தண்ணீர் குறைந்ததுடன், ஆற்றின் பல இடங்களில் பாறைகள் தெரிந்தன. இந்த நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 3,500 கன அடி நீர்வரத்து இருந்தது.
இதன்காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.