உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியில் பொருள் எதுவும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் எதிர்பார்த்தபடி அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் போட்டியிடவில்லை. பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. அவையும் பல்வேறு இடங்களில் போட்டியிட முடியாத அளவுக்கு அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த் கருத்து: உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக ஜனநாயக முறையில் வெற்றி பெறவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சி இடைத் தேர்தலில் 45 சதவீதம், 50 சதவீதம் என வாக்குப்பதிவு குறைவாக நடந்துள்ளது. பெரும்பாலான மக்கள் ஆளும்கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல், அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனால்தான், வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவே வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லவில்லை. அண்மையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. அதில், ஆளும்கட்சி வேட்பாளர்கள் சில இடங்களில் தோல்வியுற்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையும் நாடு அறியும்.
ஆனால், தமிழகத்தில் மட்டும் எந்த இடைத் தேர்தல் நடந்தாலும், அப்போது யார் ஆளும்கட்சியாக இருக்கின்றனரோ, அவர்களே முறைகேட்டின் மூலம் வெற்றி பெறுவது என்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.