கத்தாரில் சுடப்பட்ட தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

கத்தார் கடலோரக் காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவரின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு எடுத்து வர தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
கத்தாரில் சுடப்பட்ட தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Published on
Updated on
1 min read

கத்தார் கடலோரக் காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவரின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு எடுத்து வர தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் பஹ்ரைன், கத்தார் நாடுகளுக்கிடையேயான கடல் பகுதியில் செப்டம்பர் 21-ஆம் தேதி அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கத்தார் நாட்டு கடலோர காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், அவருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஐயப்பன், ராஜு, சமயமுத்து ஆகிய மூன்று பேரையும் கத்தார் நாட்டு கடலோரக் காவல் படை கைது செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், பஹ்ரைன் நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மீன் பிடிக்கும்போது அவர்கள் 4 பேரும் தவறுதலாக கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் மீது கத்தார் நாட்டு கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கார்த்திகேயன் உயிரிழந்துள்ளார். மற்ற மூவரையும் அவர்கள் கைது செய்து தோஹா சிறைச் சாலையில் அடைத்துள்ளனர்.

இந்த அப்பாவி ஏழை மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த மீனவருடைய குடும்பத்தினர், அவருடைய உடலை உடனடியாக இந்தியாவுக்கு எடுத்துவரும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள ஏழை மீனவர்களின் குடும்பங்கள் அவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்துள்ளன. அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால் மீனவர்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும்.

இறந்த கார்த்திகேயனின் உடலை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும், கைதுசெய்யப்பட்டுள்ள 3 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் கத்தார், பஹ்ரைன் நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

அதேபோல், பஹ்ரைனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கார்த்திகேயன் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை உடனடியாகப் பெற்றுத் தரும் வகையில் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமரிடம் கோரியுள்ளார்.

"ரூ.5 லட்சம் நிவாரணம்'

கத்தாரில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் கார்த்திகேயன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பஹ்ரைன்-கத்தார் நாட்டு கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கார்த்திகேயன் கத்தார் நாட்டுக் கடலோரக் காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் மரணமடைந்த மீனவர் கார்த்திகேயன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X