செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் செலுத்தப்பட உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியங்கள், அங்குள்ள கனிம வளம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான கருவிகள் மங்கள்யான் விண்கலத்தில் உள்ளன. செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும்போது ஆய்வுக்கான தகவல்களை இந்தக் கருவிகள் பூமிக்கு அனுப்பும். செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதா என்பதை காலை 8.15 மணிக்கு அறிந்துகொள்ளலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் விண்கலம் செலுத்தப்படும் நிகழ்வை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தொலைநிலை விண்வெளிக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர்.
தூர்தர்ஷனில் காலை 6.45 முதல் இந்த நிகழ்வு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.