மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், ராமேசுவரம், பாபநாசத்தில் செவ்வாய்க்கிழமை ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மாதந்தோறும் அமாவாசையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை நாள்களில் தர்ப்பணம் கொடுத்தால்போதும் என்ற நம்பிக்கை ஹிந்து மக்களிடம் உள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை மகாளய அமாவாசை என்பதால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால், காவிரியாற்று படித்துறை முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
காவிரியில் அதிகளவு தண்ணீர் செல்வதால், ஆற்றுக்குள் தடுப்புக் கம்பிகளை தாண்டி பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
காவிரியாற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(செப்.23) ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்து, வாகனங்களில் வந்து குவிந்தனர்.
பின்னர், அக்னிதீர்த்தக் கடலில் முன்னோருக்கு தர்ப்பன பூஜைகள் நடத்தி, திதி கொடுத்து கடலில் புனித நீராடினர்.
மேலும், ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
பாபநாசம் தாமிரவருணி நதியில் ஏராளமானோர் புனித நீராடினர். முன்னதாக, பாபநாசம் கோயிலில் சுவாமியும், அம்பாளும் படித்துறைக்கு எழுந்தருளினர். படித்துறை மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், தீர்த்தவாரியும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.