மின் கட்டண உயர்வுக்கு மானியம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள உத்தேச மின் கட்டண உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில், கூடுதல் மானியம் மின் வாரியத்துக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மின் கட்டண உயர்வுக்கு மானியம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள உத்தேச மின் கட்டண உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில், கூடுதல் மானியம் மின் வாரியத்துக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் 2014-15-ஆம் ஆண்டுக்கான வருவாய்த் தேவை, மின் கட்டண வீகிதத்தை நிர்ணயம் செய்வதற்கான மனுவை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

எனினும், அந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, ஆணையத்திடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் மொத்த வருவாய்த் தேவையை ரூ.39,818 கோடியாகவும், வருவாய்ப் பற்றாக்குறையை ரூ.6,854 கோடியாகவும் ஆணையம் நிர்ணயித்தது.

இந்த வருவாய்ப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாகவே முன் வந்து, அனைத்துப் பிரிவினருக்கும் சராசரியாக 15 சதவீத உத்தேசக் கட்டண உயர்வை செவ்வாய்க்கிழமை (செப்.23) அறிவித்தது.

இந்த உயர்வின் மூலம் ரூ.6,805 கோடி வருவாய் கிடைக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வரும் அக்டோபர் 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

உத்தேச மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகத் தமிழகத்துக்கு இப்போது 4 ஆயிரத்து 79 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைத்து வருகிறது. புதிய மின் திட்டங்கள் காரணமாக இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 2,206 மெகாவாட் மின்சாரம் கிடைக்க உள்ளது.

மின் வாரியம் மீட்டெடுப்பு: திமுக ஆட்சியில் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின் வாரியத்தை மீட்டெடுப்பதற்காக ரூ.25,255 கோடி நிதியுதவியை எனது தலைமையிலான அரசு செய்துள்ளது. இதில் மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக ரூ.11,149 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2014-15-ஆம் நிதி ஆண்டுக்கு ரூ.10,575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின் வாரியத்தால் பெறப்பட்ட கடனுக்கான வட்டித் தொகை, பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண விகித மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமே தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயத்தை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், மத்திய மின்சார சட்டம் 2003 ஆகியவை மின் கட்டணத்தைத் தன்னிச்சையாக நிர்ணயிப்பதற்கு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அதிகாரத்தை அளித்துள்ளன.

இந்த நிலையில், மின் கட்டணங்களை மாற்றி அமைக்கும் விதமாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை, டன் ஒன்றுக்கு ரூ.3,298 உயர்ந்துள்ளது; வெளிநாட்டு நிலக்கரியின் விலை, டன் ஒன்றுக்கு ரூ.6,896 உயர்ந்துள்ளது; பணியாளர் ஊதியம், ஓய்வூதியத்துக்கான செலவு நிகழாண்டில் ரூ.4,370 கோடி என உயர்ந்துள்ளது.

பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு: மின் உற்பத்தி, பகிர்மானக் கழக மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டிச் செலவினம் ரூ.8,463 கோடி என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோருக்கான உத்தேச மின் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக பொதுமக்கள், நுகர்வோர் ஆகியோரின் கருத்துகள் கேட்கப்பட்டு, நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின் வாரிய நலன், எதிர்கால மின் திட்டங்கள், கட்டமைப்புக்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும்.

கட்டண உயர்வு எப்படி இருந்தாலும்... மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை அரசு மின் வாரியத்துக்கு வழங்கும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.