இலங்கை அதிபர் ராஜபட்ச ஐ.நா.வில் செப்டம்பர் 25-ஆம் தேதி பேச உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
இனப்படுகொலை நடத்திய ராஜபட்சவை சர்வதேச விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று உலகத் தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐ.நா. பொது மன்றத்தில் பேசுவதற்கு அவருக்கு அனுமதி அளித்திருப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
எனவே, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு ஐ.நா.வில் ராஜபட்ச பேசுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்.
செப்டம்பர் 25- ஆம் தேதி கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை வரவேற்கிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை முதலே கருப்புச் சட்டை அணிந்து போராடுகிறோம் என்றார் அவர்.