சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை (செப்.24) ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம் மாவட்டம், சங்ககிரியில் அதிகபட்சமாக 110 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், சேலம் மாவட்டம் ஓமலூர், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் தலா 90 மி.மீ, ராசிபுரத்தில் 80 மி.மீ, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி 70 மீ.மீ, முசிறி, கொடுமுடி, நிலக்கோட்டை, காங்கேயம், சேலம், தளவாடி, மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
முன்னறிவிப்பு: கடந்த சில நாள்களுக்கு முன்னர் லட்சத்தீவு அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானது. இதன் தாக்கமாக வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. வளிமண்டத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தில் புதன்கிழமை(செப்.24) மழை நீடிக்கும்.