பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்

பாஜகவின் தஞ்சாவூர் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தாக்கப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவின் தஞ்சாவூர் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தாக்கப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர்கள் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:

பொன்.ராதாகிருஷ்ணன்: தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தின் மீது வன்முறை எண்ணம் கொண்டவர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் 30-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோரின் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்வது ஜனநாயக உரிமையாகும். இதை யாரும் தடுக்க முடியாது. மல்லிப்பட்டினத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு காவல்துறை சார்பாக போதுமான பாதுகாப்பு இல்லாததாலேயே விஷம சக்திகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தேர்தல் ஆணையமும், காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகோ: பாஜக வேட்பாளர் முருகானந்தம் மல்லிப்பட்டினத்துக்கு வாக்காளர்களைச் சந்திக்க பிரசாரத்துக்கு சென்றபோது ஊருக்குள் வரக்கூடாது என்று வன்முறையாளர்கள் பலர் தடுத்துள்ளனர். மேலும் பயங்கர ஆயுதங்களுடன் வேட்பாளரையும், அவருடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். வேட்பாளருக்குக் காயம் ஏற்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். பாஜகவை கடுமையாக முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். அதன் பின்னணியில்தான் மல்லிப்பட்டினத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி: மல்லிப்பட்டினம் பகுதியில் பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்யக்கூடாது என்று ஓர் அமைப்பைச் சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இதற்கு என் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தேசிய ஐனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. ஜனநாயகத்துக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com