தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், ஆண்களை விட பெண்களே அதிகளவு வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், ஆண்களை விட பெண்களே அதிகளவு வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் 73.49 சதவீத ஆண்களும், 73.85 சதவீத பெண்களும் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 12.72 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப். 24) நடைபெற்றது. தேர்தலில் 73 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் சதவீதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது.

மாநிலத்தில், மொத்தம் 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர் உள்ளனர். அவர்களில் 73.67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 4 கோடியே 6 லட்சத்து 3 ஆயிரத்து 123 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பெண்களே அதிகம்: மொத்தமுள்ள வாக்காளர்களில் ஆண்கள் 73.49 சதவீதம் பேர், பெண்கள் 73.85 சதவீதம் பேர், திருநங்கைகள் 12.72 சதவீதம் பேர். தமிழகத்தில் முதன்முறையாக ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதுபோல் வாக்குப்பதிவிலும் ஆண்களை பெண்கள் முந்திவிட்டனர்.

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.14 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 60.37 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.58 சதவீதம் ஆண்களும், சிதம்பரம் தொகுதியில் 81.91 சதவீதம் பெண்களும் வாக்களித்துள்ளனர்.

சென்னையில் 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 61.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 63.59 சதவீதம் ஆண்கள், 60.09 சதவீதம் பெண்கள், 2.29 சதவீதம் திருநங்கைகள் ஆவர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 74.1 சதவீதம் ஆண்களும், 71.9 சதவீதம் பெண் வாக்காளர்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

தாமதத்துக்கு காரணம்? இந்த முறை மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில், வாக்குப் பதிவு முடிந்ததும், பொதுவாக வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை கணக்கெடுப்பதற்காக வாக்குச்சாவடியில் தனி குழு நியமிப்படுவது வழக்கம்.

ஆனால், சில இடங்களில் தனி குழுவை நியமிக்காமல், வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் அனைத்துப் பணியாளர்களும் ஈடுபட்டதால், எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணியை கவனிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அந்த மாவட்டங்களில் இருந்து இறுதி நிலவரம் வர தாமதமானதால், மொத்த நிலவரத்தைக் கணிப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்றார் பிரவீண்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com