சுடச்சுட

    

    மீனவர் பிரச்னைக்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்: நரேந்திர மோடி

    By dn  |   Published on : 09th February 2014 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக, குஜராத் மீனவர்கள் பிரச்னை நீடிப்பதற்கு பலவீனமான மத்திய அரசே காரணம் என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

    சென்னை அருகே வண்டலூரில், பா.ஜ.க. சார்பில் சனிக்கிழமை பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் நரேந்திர மோடி பேசியதாவது:

    ""தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலும், குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் மத்திய அரசுக்கு போதிய அக்கறையில்லை. மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து நீடிப்பதற்கு பலவீனமான மத்திய அரசே காரணம்.

    மத்திய அரசு பலவீனமாக இருப்பதால்தான், இந்தியாவின் கோரிக்கைகளுக்கு அண்டை நாடுகள் செவிசாய்ப்பதில்லை. இந்தியா மெத்தனமாக இருப்பதன் காரணமாக இலங்கை-பாகிஸ்தான்-வங்கதேசம்-நேபாளம்-மியான்மர் போன்ற நாடுகளில் இந்திய மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் உள்ள அரசு வலுவான அரசாக இருந்தால், அண்டை நாடுகளுடன் வலுவான உறவைப் பேணமுடியும்.

    தவறாக பயன்படுத்தப்படும் சிபிஐ: அரசியல் காரணங்களுக்காக சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. சிபிஐ சரியான வழியில் செயல்பட்டால்தான் தவறிழைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும்.

    இதே போன்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வருமான வரித்துறையை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறது.

    குஜராத்துக்கு முதலீடு செய்ய வரும் தொழிலதிபர்களை மிரட்டி முதலீடு செய்யாமல் தடுக்கும் பணியில் வருமான வரித்துறை ஈடுபடுகிறது. மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், எஸ்.டி., எஸ்.சி. ஆணையம் என மக்களுக்கு நன்மை செய்யும் அமைப்புகளையும் செயல்பட விடாமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.

    நீதிமன்றத்தை அவமதிக்கிறது: தற்போதுள்ள மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது. இந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் நீதிமன்றத்தின் மீது, குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    நாட்டில் உள்ள உணவு தானியக் கிடங்குகளில் ஏராளமான உணவுப் பொருள்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகின்றன. இப்படி வீணாகும் பொருள்களை ஏழை மக்களுக்குக் கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட மத்திய அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் உணவுப் பொருள்கள் வீணாகிவிட்டதாகக்கூறி. ஒரு கிலோ அரிசி 80 காசு என மதுபான ஆலைகளுக்கு விற்று வருகிறது..

    நதிகள் இணைப்புத் திட்டம்: நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி ஒன்றாக இணைக்க வேண்டும் என்று வாஜபாய் பிரதமராக இருந்தபோது திட்டம் தீட்டினார்.

    ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. நதிகளை இணைக்க குழு அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 15 மாதங்களாகியும் குழு அமைக்கப்படவில்லை.

    திட்டக் கமிஷனுக்கு மரியாதை இல்லை. திட்டக் கமிஷன் தலைவராக பிரதமர் இருக்கிறார். ஆனால், திட்டக் கமிஷனின் பரிந்துரைகளை, மத்திய அமைச்சரவைக் குழு நிராகரிக்கிறது. திட்டக் கமிஷனுக்குப் போட்டியாக தேசிய ஆலோனைக் குழு செயல்படுகிறது. தேசிய ஆலோசனைக் குழுவை யாரோ ஒருவர் (அவர் சோனியா காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டார்) திரைமறைவில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

    ஆளுநர் மாளிகைகளா அல்லது காங்கிரஸ் கட்சி அலுவலகங்களா? ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாநிலத்தின் உறவை பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருடையது. மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற மாநில சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும். ஆளுநர் அந்த சட்டத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படிச் செய்தால் மாநில அரசுகள் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை.

    ஆளுநர் மாளிகைகளை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களாக மாறிவிட்டன என்று நரேந்திரமோடி குற்றஞ்சாட்டினார்.

    பாஜக தலைவர்கள் வெங்கைய்யா நாயுடு, முரளிதர் ராவ், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன். எச்.ராஜா மற்றும் மதிமுக-இந்திய ஜனநாயகக் கட்சி-கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-புதிய நீதிக் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai