Enable Javscript for better performance
7 பேர் விடுதலை: தாமதமாக வந்தாலும், மகிழத்தக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    
    karunidhi

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் விடுதலை தர, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தாமதமான நடைமுறை என்றாலும் மகிழத்தக்க முடிவு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

    சென்னையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கின்றனரே?

    மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து, தூக்குத் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டால், மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

    தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாகக் கருதலாமா?

    இது துரித முடிவு இல்லை. 2011-ஆம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்தபோது, அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர்தான் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தற்போது அதே நிலையை எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

    தமிழக அரசே விடுவித்திருக்கலாமே, மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

    அது தொடர்பாக விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்கள் என்றால், அவர்களை இன்றைக்கே விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்பட்டிருக்காது. தாமதமாக வந்தாலும் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்பட்டால் நல்லதுதானே.

    கால தாமதம் ஏற்பட்டதற்காக, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறதே?

    அதைப்பற்றி யாரும் எங்களிடம் பேசவில்லை. அதனால் நாங்கள் அது பற்றி சிந்திக்கவில்லை. அப்படியொரு கோரிக்கை வைக்கப்பட்டால், அது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

    கருணாநிதி வேண்டுகோள்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் புதன்கிழமை (பிப்.19) காலை 10.30 மணிக்கு நிறைவேற்றப்பட்டது.

    அதற்கு முன்னதாக புதன்கிழமை காலை 9 மணியளவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வலியுறுத்தி கருணாநிதி மீண்டும் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். இதே கருத்தை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமையும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai