சுடச்சுட

  

  குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

  By dn  |   Published on : 25th June 2014 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hc

  திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிக்கும்போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.

  வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: குற்றால அருவியை பார்வையிடுவதற்கும், அங்கு குளிப்பதற்காகவும் பல லட்சம் மக்கள் வருகை புரிகின்றனர்.

  அருவியில் குளித்து வெளியே வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடை மாற்றுவதற்குகூட அறைகள் அங்கு இல்லை.

  எனவே, குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலாத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

  இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணையின்போது, மனு தொடர்பாக குற்றாலத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தனர். அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

  இதில் முதல் உத்தரவே, குற்றால அருவியில் குளிக்கும்போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. அது போன்ற பொருள்களை குளிக்கும் இடங்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த தண்ணீர்தான் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு குடிநீருக்கான முக்கிய ஆதாரம்.

  அருவி விழும் பகுதிகள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகே அதிகமான கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கட்ட வேண்டும்.

  அருவிகளுக்கு அருகே அதிகமான சுத்திகரிப்பு இயந்திரங்கள், குடிநீர் மையங்களை விரைவில் அமைக்க வேண்டும்.

  அருவிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி, தொலைவான இடங்களில் அமைக்க வேண்டும்.

  மருத்துவ அவசர உதவிக்காக 24 மணிநேரம் செயல்படும் மருத்துவமனைகள் அல்லது மையங்களை அங்கே அமைக்க வேண்டும்.

  கார் நிறுத்தம், அருவிகள், கோயில்கள், பஸ் நிலையம் போன்ற முக்கியமான பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்பன உள்பட 33 வகையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

  மேலே கூறப்பட்ட உத்தரவுகள் அனைத்தையும் நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் உள்பட 9 அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai