சுடச்சுட

  
  udayakumar1

  கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், ஆம்ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை சேர்ந்தார்.

  இனி அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை பெண்கள் முன்னின்று நடத்துவார்கள் என உதயகுமார் தெரிவித்தார்.

  போராட்டக் குழுவினர் ஆம்ஆத்மி கட்சியில் இணைவதற்கான நிகழ்ச்சி இடிந்தகரை புனித அந்தோனியார் ஆலயம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் ஆம்ஆத்மி கட்சியின் தமிழக பிரசார குழுத் தலைவர் டேவிட் வருண்குமார், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி சேவியர் ஆகியோர் முன்னிலையில் எஸ்.பி.உதயகுமார் அக்கட்சியில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து மை.பா.சேசுராஜ் மற்றும் இருவர் சேர்ந்தனர். இவர்களுக்கு ஆம்ஆத்மி கட்சியின் தொப்பியை கட்சியினர் அணிவித்தனர். பின்னர், உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:

  கூடங்குளம் அணுஉலையை மூடவேண்டும் என்கிற எங்களது கோரிக்கையில் எந்தவித பின்னடைவும் இல்லை. தொடர்ந்து அணுஉலைக்கெதிரான போராட்டம் நடக்கும். போராட்டத்தை எங்களைவிடவும் திறமையான பெண்கள் முன்னின்று நடத்துவார்கள்.

  அரசியல்ரீதியாக எங்களது கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் நாங்களே வாதாடுவதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

  இன்றைய சூழ்நிலையில் ஒரு நல்ல கொள்கையோடு செயல்பட்டுவருகின்ற ஆம்ஆத்மி கட்சியில் சேர்கிறோம். ஆம்ஆத்மி கட்சியில் நாங்கள் சேர்வதன்மூலம் எங்களது மக்கள் பணி அரசியலுக்கு செல்கிறது என்றார் அவர்.

   

  நிபந்தனைகள் ஏற்பு

   

  இடிந்தகரையில் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியது: ஆம்ஆத்மி கட்சியில் சேர்வது தொடர்பாக 5 நிபந்தனைகளை விதித்திருந்தோம். அதற்கு அவர்கள் தெளிவான பதிலைத் தந்திருக்கிறார்கள்.

  அணுஉலை தொடர்பாக ஆம்ஆத்மி கட்சி தெளிவான முடிவை அறிவித்திருக்கிறார்கள். எந்தத் திட்டம் ஆனாலும் உள்ளூர் மக்கள் விருப்பத்துடன்தான் தொடங்கப்பட வேண்டும். உள்ளூர் மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்தத் திட்டத்தையும் ஆம்ஆத்மி ஆதரிக்காது எனக் கூறியிருக்கிறார்கள். அணுசக்தி வேண்டுமா, வேண்டாமா என்பதுகுறித்து பரந்த மக்கள் விவாதம் நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க ஆம்ஆத்மி கட்சி உறுதியளித்திருக்கிறது.

  ஆம்ஆத்மி கட்சி மக்களுக்கு புரியாத பெயராக இருப்பதால் தமிழ் மக்கள் புரிந்துகொள்ளும்விதத்தில் "எளிய மக்கள் கட்சி' என்ற பெயரை பயன்படுத்தவிருக்கிறோம். இதற்கு ஆம்ஆத்மி கட்சி அனுமதி வழங்கியிருக்கிறது.

  ஈழத் தமிழரின் பிரச்னையை சர்வதேச அளவுக்கு கொண்டுசெல்லவும் உறுதி அளித்திருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருக்கிறார்கள் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai