Enable Javscript for better performance
ஒரு வாரத்தில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக பாஜகவுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ஒரு வாரத்தில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக பாஜகவுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

    Published on : 01st March 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Rajnath

    மக்களவைத் தேர்தல் கூட்டணியை ஒரு வாரத்துக்குள் இறுதி செய்யுமாறு, தமிழக பாஜக தலைவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழகத்தில் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசியப் பொதுச்செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான முரளிதரராவ், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, மூத்த தலைவர் இல. கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    பாஜக கூட்டணயில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை இணைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து இந்தக் கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் தமிழகத் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

    தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதால், இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேசி கூட்டணியை இறுதி செய்யுமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதாக பொன். ராதாகிருஷ்ணன் தினமணி நிருபரிடம் தெரிவித்தார்.

    தொடரும் சிக்கல்: பாஜக கூட்டணியில் மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இணைந்துள்ளன. தேமுதிக, பாமகவை இணைக்க பாஜக தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த வாரம் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷுடன் பாஜக தலைவர்கள் முரளிதரராவ், பொன். ராதாகிருஷ்ணன், மோகன்ராஜூலு ஆகியோர் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எந்த நேரத்திலும் கூட்டணி அறிவிப்பு வெளியாகலாம் எனவும் செய்திகள் வெளியாகின.

    ஆனால், குறிப்பிட்ட சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை தயாராக இல்லாததால் பாஜக கூட்டணியில் வியாழக்கிழமை (பிப். 27) திடீர் சிக்கல் ஏற்பட்டது. பாஜக - திமுக இடையே பேச்சு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்களை தில்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங், ஒரு வாரத்தில் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச சுதீஷ், சனிக்கிழமை (மார்ச் 1) தில்லி செல்லக்கூடும் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai