Enable Javscript for better performance
கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை: பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை: பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    By dn  |   Published on : 01st March 2014 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்கும் வகையில் பெண்களை மையப்படுத்திய கொள்கை, செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என மாற்றத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து அந்த கூட்டமைப்பைச் சேர்ந்த பர்னாட் பாத்திமா, கீதா உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

    தலித், இருளர், பழங்குடியினர், மீனவர், மாத்தம்மா, இஸ்லாமியர், பாலியல் தொழிலாளர், நரிக்குறவர், திருநம்பிகள், சிறுதொழில் வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், விவசாய கூலி, திருநங்கைகள் மற்றும் புதிரைவன்னர் உள்ளிட்ட சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த கூட்டமைப்பில் 350 அமைப்புகள் உள்ளன. அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    பெண்கள் கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கைகள்: நிலப்பங்கீடு, நிலம் மற்றும் நில சார்ந்த வளங்கள் பெண்களுக்கு உறுதி செய்யப்படும் வகையிலான வேளாண் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களில் வழங்கப்படுவது போல் அனைத்து மாநில தலித் பெண்களுக்கும் கூட்டு விவசாயத்துக்கு நிலம் வழங்கப்பட வேண்டும்.

    துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மலம் அள்ளும் தொழிலை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். துப்புரவுப் பெண் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து தொழிற்பயிற்சி கொடுத்து புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

    நரிக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அங்கீகரித்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். திருநங்கைகள், திருநம்பியருக்கு எதிரான தவறான சமூக பார்வையில் இருந்து விடுபட தொழிற்கல்வி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    பாலியல் தொழிலாளர்கள் குற்றவாளிகள் என்று பார்க்கப்படாமல் அவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மறுவாழ்வுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். மீனவ பெண்களின் வீடு மற்றும் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai