சுடச்சுட

    

    திரு.வி.க. பிறந்த துண்டலம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்கப்படுமா?

    By ச.கார்த்திக்  |   Published on : 01st March 2014 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvk

    தமிழறிஞர் திரு.வி.க. பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை போரூர் அருகே அமைந்துள்ளது துண்டலம் என்றழைக்கப்படும் துள்ளம் கிராமம்.

    இக்கிராமத்தில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி விருதாசலம் - சின்னம்மாள் தம்பதிக்கு மகனாக திரு.வி.கல்யாணசுந்தரனார் பிறந்தார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் படித்து, அப்பள்ளியிலேயே ஆசிரியரானார். தமிழகத்தில் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்து, தொழிலாளர்களின் உரிமைக்கும், முன்னேற்றத்துக்கும் தீவிரமாக பாடுபட்டார்.

    அரசியல், சமுதாயம், சமயம் என பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த் தென்றல், சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    தமிழ்மொழி மீதான தீராத பற்றால் பல்வேறு கருத்துகள் பொதிந்த நூல்களை எளிய தமிழ் நடையில் உருவாக்கி தமிழ் ஆர்வலர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதன் காரணமாகவே "தமிழ்த்தென்றல்' என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். காந்தியடிகளின் சீடரான திரு.வி.க., 1917-ஆம் ஆண்டு விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து "தேசபக்தன்' என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

    பின்னர் "நவசக்தி' என்னும் இதழையும் நடத்தி வந்தார்.

    மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை: திரு.வி.க. பிறந்த துண்டலம் பகுதி, திருவள்ளூர் மாவட்டம், போரூரை அடுத்த காரம்பாக்கம் ஊராட்சியில் முன்பு அமைந்திருந்தது. அதன் பின்னர், சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்த போது, இப்பகுதி சென்னை மாநாகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    தற்போது இந்த இடம், மாநகராட்சியின் 150-வது வார்டில் அமைந்துள்ளது. துண்டலம் பகுதியில் கடந்த திமுக ஆட்சியின்போது திரு.வி.க.வைப் போற்றும் விதமாக நூலகம் மற்றும் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டது.

    தற்போது தமிழக அரசு, பல்வேறு தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பித்து வருகிறது. அதேபோல் திரு.வி.க.வின் சிறப்பை போற்றும் வகையில் அவருக்கும் துண்டல் பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மேலும் இங்கு பல மாதங்களாக இயங்காமல் உள்ள திரு.வி.க. நூலகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai