சுடச்சுட

    

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ. 5,661 வரை ஊதிய உயர்வு

    By dn  |   Published on : 01st March 2014 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayalalitha

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5,661 வரை ஊதிய உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டன. தற்போது 4,524 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

    31-3-2011-ல் ரூ. 1,245.51 கோடியாக இருந்த இந்த சங்கங்களின் சொந்த மூலதனம், 31-3-2013-ல் 1,782.16 கோடியாகவும், வைப்பீடுகள் ரூ. 4,776.74 கோடியிலிருந்து, ரூ. 6,268.80 கோடியாகவும், கடன் உதவி ரூ. 11,857,24 கோடியிலிருந்து ரூ. 16,764.52 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

    மொத்த சங்கங்களில் 671 சங்கங்கள் தொடர் லாபத்திலும், 3,442 சங்கங்கள் சில ஆண்டுகளில் லாபம் ஈட்டியும், மீதமுள்ள 411 சங்கங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன.

    இந்த சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படியை வழங்க ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். தங்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று, மாவட்ட கூட்டுறவு வங்கியிலிருந்து எந்த உதவியும் பெறாமல் சொந்த நிதியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் நிகர லாபத்தில் இயங்கிவரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 12 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    3 ஆண்டுகள் வரை நிகர லாபத்தில் இயங்கி, ஊழியர்களுக்கு 14 சதவீத ஈவுத் தொகையை தொடர்ந்து வழங்கிவரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து நிதியுதவி பெற்று தொடர்ந்து 5 ஆண்டுகள் நிகர லாபத்தில் இயங்கிவரும் சங்கங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களின் ஊழியர்களுக்கு 7 சதவீதமும், நஷ்டத்தில் செயல்படும் சங்கங்களின் ஊழியர்களுக்கு 5 சதவீதமும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    ரூ. 1 கோடி மற்றும் அதற்கு கீழ் கடன் நிலுவையில் உள்ள சங்கங்களின் ஊழியர்களுக்கு கடன் நிலுவை ரூ. 1 கோடிக்கும் மேல் உயர்ந்த பிறகு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    இதன் மூலம் ரூ. 558 முதல் அதிகபட்சமாக ரூ. 5,661 வரை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த ஊதிய உயர்வு அனைத்தும் 1-4-2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

    இதனால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 26.89 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai