சுடச்சுட

    

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

    By dn  |   Published on : 01st March 2014 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை தூக்கி எறிய மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (பிப்.28)

    நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசாவும் டீசல் விலை ரூ. 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன.

    இதன் மூலம், தட்டிக் கேட்க ஆளில்லை என தன்னை மத்திய அரசு கருதிக் கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கும் இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வழக்கம்போல சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது என்றும் கூறி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இவ்வாறு மாதம்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஏழை, எளிய இந்திய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

    இந்த விலை உயர்வால் லாரி மற்றும் தனியார் வாகனங்களுக்கான கட்டணங்கள் உயரும். இதனால் மாணவ, மாணவிகள், அலுவலகங்கள் செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடுதலாக வாகனக் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

    காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதோடு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இத்தகைய துன்பத்தை இன்னும் 3 மாதங்களுக்குத்தான் மக்கள் தாங்க வேண்டிய நிலை இருக்கும். அதன் பிறகு அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai