Enable Javscript for better performance
மஞ்சள் நிறத்திலிருந்து பச்சைக்கு மாறும் ரேஷன் கடைகள்- Dinamani

சுடச்சுட

    

    மஞ்சள் நிறத்திலிருந்து பச்சைக்கு மாறும் ரேஷன் கடைகள்

    By dn  |   Published on : 01st March 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ration_shop

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் அனைத்து ரேஷன் கடைகளும் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள், முழுநேர ரேஷன் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 700-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன.

    இதில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் சொந்தக் கட்டடத்திலும், மீதமுள்ள கடைகள் வாடகைக் கட்டடத்திலும் இயங்கி வருகின்றன.

    பொதுவாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்ததந்த முதல்வர்களுக்கு ஏற்ற நிறத்தில் முதல்கட்டமாக ரேஷன் கடைகள் நிறம் மாற்றம் செய்யப்படும்.

    நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் நேரடியாகச் சென்று பயன்பெறுவது அரசின் ரேஷன் கடைகளில்தான். இதனால் அந்தந்த கட்சிகளுக்கேற்ப நிறங்கள் மாற்றப்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.

    கடந்த ஆட்சிக்காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தன.

    இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பல ரேஷன் கடைகள் நீலம், காவி உள்ளிட்ட நிறங்களுக்கு மாற்றப்பட்டன.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பச்சை நிறத்துக்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.

    இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் சிலர் கூறியது: மக்கள் தினந்தோறும் வந்து செல்லும் ரேஷன் கடைகளுக்கு ஆண்டுதோறும் புதிய வர்ணம் பூசப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டும் புதிய வர்ணம் பூசப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பச்சை நிறம் தீட்டப்படுகிறது. ரேஷன் கடைகள் மட்டுமல்ல, எரிதகன மேடை, மகளிர் கட்டடம், கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் உள்ளிட்ட அரசுக் கட்டடங்கள் அனைத்தும் அவ்வப்போது நிறம் மாற்றம் செய்யப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai