Enable Javscript for better performance
ராஜபட்சவை மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது: ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    
    ramadoss

    இலங்கை அதிபர் ராஜபட்சவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    மியான்மரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் முன்முயற்சி (பிம்ஸ்டெக்) அமைப்பின் 3-ஆவது மாநாடு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கை, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச வரும் 4-ஆம் தேதி சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்தது உண்மை என்றும், இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலைதான் என்றும் பல்வேறு தீர்ப்பாயங்கள் தீர்ப்பளித்துள்ளன.

    இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2 முறை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டபோதிலும், அதன் மீது எந்த நடவடிக்கையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை.

    இதற்கு மேலும் இலங்கைக்குக் கெடு வழங்க முடியாது என்ற நிலையில், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பரிந்துரைத்துள்ளார்.

    இந்தப் பரிந்துரையை ஏற்று, இலங்கை மீது போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தை வரும் மார்ச் 3-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தில், இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே எழுந்துள்ளது.

    இந்தச் சூழலில், போர்க்குற்றவாளியாகக் கருதப்பட வேண்டிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசவிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

    எனவே, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபட்சவை மியான்மர் மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது.

    மாறாக, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்

    வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai