Enable Javscript for better performance
ரூ.6 கோடி மோசடி புகார்: நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.6 கோடி மோசடி புகார்: நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    By dn  |   Published on : 01st March 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் நிறுவன திட்ட அறிக்கைகளைப் பயன்படுத்தி ரூ.6 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட 8 பேர் மதுரை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.

    மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த கார்வின் டிசைன் கன்சல்டன்ட் நிறுவன மேலாளர் ராமநாதன் மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். புகார் மனு விவரம்: மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோயில் சுற்றுப்புறப் பகுதிகள், மீனாட்சி பூங்கா, புதுமண்டபம், பெரியார் பஸ் நிலையம் ஆகியவற்றை அழகுபடுத்தும் திட்டம், குன்னத்தூர் சத்திர கட்டுமானப் பணிகள், மதுரையில் பாரம்பரிய இடங்களைப் புனரமைக்கும் திட்டம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக திட்ட அறிக்கைகள், திட்ட மதிப்பீடு, வரைபடங்களை தயாரித்து மாநகராட்சியிடம் வழங்கினோம். இவற்றைபயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் மத்திய, மாநில அரசுகளிடம் நிதி பெற்றனர். ஆனால், நிறுவனத்துக்கு உரிய தொகையை வழங்கவில்லை.

    நாங்கள் அறிக்கைகள் அளித்த மொத்த திட்டங்களின் மதிப்பு ரூ.208 கோடியாகும்.

    இதில் நிறுவனத்துக்கு வரவேண்டிய தொகை ரூ.6.12 கோடி. மேலும், எங்கள் திட்ட அறிக்கைகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசிடம் நிதி பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக அளித்த புகார் மீது தல்லாகுளம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்கவும், ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ஆஜராகும்படி குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    அதன்படி, மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையரும் நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநருமான செபாஸ்டியன், மாநகராட்சி முன்னாள் ஆணையர் நடராஜன், மாநகராட்சி முன்னாள் தலைமை பொறியாளர் சக்திவேல், முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தற்போதைய நகரப் பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் ராஜேந்திரன், மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் மோகன், இனஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகிய 8 பேர் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி திரிவேணி, விசாரணையை வரும் ஏப்.4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai