சுடச்சுட

    

    20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

    By dn  |   Published on : 01st March 2014 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    facetoface

    தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

    மேலும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை பரிந்துரையாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, 32 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகளுடன் சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதில், 30 சதவீதத்துக்கும் அதிகமான மையங்கள் அதாவது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். குறிப்பாக அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மாநிலத்தில் மொத்தம் 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

    அதிகாரிகளுக்கு பயிற்சி: சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியர்களுக்கான பயிற்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பயன்பாடு, மாவட்டத்தில் தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, வாக்குப் பதிவின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும், அதிகளவிலான பணத்தை எடுத்துச் செல்வதைக் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    புகைப்படங்கள் ஆதாரங்களாகும்: தேர்தலில் வாக்களிப்பதற்காக பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் குற்றமாகும். வாக்களிக்க பணம் பெற்றால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கெனவே சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் குற்றத்தை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் தேவை. எனவே, பணம் பெற்றாலோ அல்லது வாங்கினாலோ அது தொடர்பான புகைப்படங்களை ஆதாரங்களாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம். அதை ஆதாரமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

    விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: தேர்தலில் வாக்களிப்பதற்கு பணமோ அல்லது பரிசுப் பொருள்களோ பெற்றால் அதன்பின், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியிடம் சென்று ஐந்தாண்டுகளுக்கு நமது உரிமையை கேட்க முடியாது.

    எனவே, வாக்களிப்பதற்கு பணம் பெறக் கூடாது என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ள உள்ளது.

    ஒரே கட்டமாக நடக்குமா? தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.

    ஆனால், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் என்றார் பிரவீண்குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai