சுடச்சுட

    

    இந்து அறநிலையத் துறை ஆணையர் மறு நியமனத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

    By dn  |   Published on : 02nd March 2014 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் மறு நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

    கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக தனபால் நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு 2013-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதே நாளில் தனபாலை மீண்டும் அதே பதவியில் மறு நியமனம் செய்து இந்து சமய அறநிலையத் துறைச் செயலர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் பி.ராஜேந்திரன் உள்பட 3 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோதமாக கூடுதல் ஆணையராக தனபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சட்ட விதிகளின்படி அறநிலையத் துறை ஆணையராக, நீதித் துறை உயர் பொறுப்பு வகிப்பவர்கள் அல்லது கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ளவர்களை நியமிக்கலாம்.

    மேலும், நேரடி நியமனம் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க முடியும். இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையராக இருந்த பி.தனபால், 2013 மே 31-இல் பணி ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய விண்ணப்பத்தின்பேரில், ஓய்வு பெற்ற நாளில், மீண்டும் அவர் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக மறுநியமனம் செய்து அரசு உத்தரவிட்டது.

    இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணி என்பது நிர்வாகப் பணி மட்டுமல்லாமல், நீதித் துறைக்கு ஈடான பணியும் அடங்கியதாகும். மறு ஆய்வு மற்றும் மேல் முறையீடு மனுக்களுக்கு தீர்வு காண்பது போன்ற நீதித் துறை சார்ந்த பணிகள் உள்ளன. இதனால்தான் நீதித் துறையில் இட மாறுதல் மூலம் அறநிலையத் துறை ஆணையர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

    மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் பெரும்பாலும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவர். ஓய்வு பெற்ற ஒருவரை ஆணையர் பணியில் நியமிக்க விதிகளில் இடம் கிடையாது. ஆகவே, அவரது மறுநியமன உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல, மேலும் 2 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது, அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, தமிழ்நாடு அரசு சார்நிலைப் பணி விதி 45, மேற்குறிப்பிட்ட பதவிக்கு தகுதியான நபரை நியமனம் மற்றும் மறு நியமனம் செய்ய அனுமதிக்கிறது. அதன்படி அவர் மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார் என வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையராக பி.தனபால் மறுநியமனம் செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அதனால், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai