சுடச்சுட

    

    கடலூர் காவலர் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

    By dn  |   Published on : 02nd March 2014 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த காவலர் தெய்வகுமாரின் சந்தேக மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

    கடலூர் காவல்துறையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வந்த, காட்டுமன்னார்குடி வட்டம் சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வகுமார், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தலையில் பலத்த காயங்களுடன் காது அறுபட்ட நிலையில் சோழத்தரம் அருகே பிணமாக கிடந்தார்.சூழ்நிலை மற்றும் காயங்களின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் கருதுகின்றனர். ஆனால், காவல் துறை இதனை சந்தேக மரணம் என பதிவு செய்துள்ளது. தெய்வகுமாரின் உறவினர்கள் இதனை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    சம்பவம் நடந்து 15 நாள்கள் கடந்த பிறகும் புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி காவலர் தெய்வகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருத வேண்டியுள்ளது.

    காவல் துறையில் பணிபுரிந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதும், அதன் மீதான புலன் விசாரணையில் தாமதம் ஏற்படுவதும் வருத்தம் அளிக்கிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai