Enable Javscript for better performance
காமராஜர் துறைமுகத்திடம் உப்புத் துறையின் 648 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    காமராஜர் துறைமுகத்திடம் உப்புத் துறையின் 648 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் ஒப்பந்தம்

    By dn  |   Published on : 02nd March 2014 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vasan_kamarajport

    எண்ணூர் அருகே உள்ள மத்திய அரசின் உப்புத் துறைக்குச் சொந்தமான 648 ஏக்கர் நிலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திடம் சனிக்கிழமை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கான நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார், உப்புத்துறை இணை ஆணையர் கசாயப் ஆகியோர் முன்னிலையில் காமராஜர் துறைமுகம் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 483 கோடிக்கான காசோலையை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனிடம் வழங்கினார்.

    காசோலையைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் 648 ஏக்கர் நிலத்தை காமராஜ் துறைமுகத்துக்கு உரிமை மாற்றம் செய்வதற்கான உத்தரவை அமைச்சர் வாசனிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பேசியது:

    நாட்டின் இளைய துறைமுகமாக 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எண்ணூர் துறைமுகம் தற்போது காமராஜர் துறைமுகமாக மாற்றப்பட்டு விரைவான வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தலா 30 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு வருகிறது.

    12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இயற்கை எரிவாயு முனையம், சரக்குப் பெட்டக முனையம், பல் சரக்கு கையாளும் முனையம், நிலக்கரி கையாளும் முனையம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இத்திட்டங்கள் நிறைவடையும்போது ஆண்டுக்கு 67 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறனை எண்ணூர் காமராஜர் துறைமுகம் பெறும்.

    இத்துறைமுகத்துக்கு ஏற்கனவே 2,083 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது உப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டுள்ள 648 ஏக்கர் நிலம் இத்துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    மேலும் சமீபத்தில் கப்பல்துறை அமைச்சகம் அறிவித்த நிலம் வழங்கும் கொள்கையின் மூலம் இந்நிலத்தைக் கொண்டு வருவாய் ஈட்ட முடியும்.

    12 ஆண்டுகளாகத் கிடப்பிலிருந்த கோப்பு நாட்டின் நன்மையைக் கருதி இரு அமைச்சகங்களும் இணைந்து செயல்பட்டதால் 6 மாதங்களில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடிந்துள்ளது.

    இதே போன்று தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். மேலும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கோரிக்கையை ஏற்று உப்புச் சத்தியாகிரக நினைவு வாயில் அமைக்கவும், உப்பு ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தவும் காமராஜர் துறைமுகம் முழுமையாக சம்மதம் தெரிவித்துள்ளது என்றார் அமைச்சர் வாசன்.

    தொழில் வளர்ச்சிக்காகவே உப்புத் துறை நிலங்கள் விற்பனை: நிகழ்ச்சியில் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேசியது:

    மத்திய அரசின் உப்புத் துறையின் கீழ் சுமார் 81 ஆயிரம் ஏக்கர் கடலோர உப்பு நிலங்கள் உள்ளன. இதில் உப்பு உற்பத்தி செய்யப்படாத நிலங்களை வளர்ச்சித் திட்டங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட விலையைப் பெற்றுக்கொண்டு அரசு சார் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    இதன்படி எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு 75 ஏக்கர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு 108 ஏக்கர், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு 100 ஏக்கர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு 3,543 ஏக்கர் நிலம், காமராஜர் துறைமுகத்துக்கு முன்பு 35 ஏக்கரும், தற்போது 648 ஏக்கர் நிலமும் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உப்பு என்பது வரலாற்றுப் பின்னணி கொண்டது. ஆங்கிலேய அரசை எதிர்த்து உப்பு உற்பத்தி செய்யும் சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தியடிகள் தொடங்கி நாடு முழுவதும் முன்னெடுத்துச் சென்றார்.

    நாடு விடுதலை அடைந்தபோது உப்புத்துறை முழுவதும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனை நினைவு கூரும் வகையில் காமராஜர் துறைமுகத்தில் காந்தியடிகள் பெயரில் உப்புச் சத்தியாகிரக நுழைவுவாயில் அமைக்க வேண்டும். உப்புத் துறையிடமிருந்து நிலம் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து எண்ணூரில் ஒரு உப்பு ஆய்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.

    நிகழ்ச்சியில் ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் அடானி எண்ணூர் சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம், ரூ.4,512 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இயற்கை எரிவாயு முனையம் அமைப்பதற்கான இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை அமைச்சர் வாசன் முன்னிலையில் கையெழுத்தாயின.

    இதில் சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, கப்பல்த்துறை இணைச் செயலாளர் என்.முருகானந்தம், மக்களவை உறுப்பினர் ஹாரூன், தேசிய கடல்சார் வாரிய உறுப்பினர் ராஜ்மோகன், காமராஜர் துறைமுக இயக்குனர் சஞ்சய்குமார், பொதுமேலாளர் செந்தில்குமார், சென்னை சரக்குப் பெட்டக தலைமை செயல் அதிகாரி என்னரசு, தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் சோழநாச்சியார், மக்கள் தொடர்பு அதிகாரி அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai