Enable Javscript for better performance
\\\"காவிரி பிரச்னையில் தமிழர்கள் ஒன்றுபடுவது அவசியம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராட்டம் நடத்துவது அவசியம் என்றார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்.

    தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற காவிரி எழுச்சி மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது: தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் பயிர் வாடினால் ஒட்டுமொத்த தமிழர்களின் வயிறும் வாடும். எனவே, காவிரி பிரச்னையை ஏழரை கோடி தமிழர்களின் தேசிய பிரச்னையாக கருத வேண்டும்.

    தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வழங்கக் கூடாது என்பதில், கர்நாடகத்தில் உள்ள அனைத்து மக்களும், அனைத்து தலைவர்களும் வேறுபாடின்றி உறுதியாக உள்ளனர்.

    காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். இதனை அனைத்து மக்களும் தங்களுடைய பிரச்னையாக கருத வேண்டும்.

    காவிரி பிரச்னை 1968 ஆம் ஆண்டில் உருவானது. அப்போது முதல் தொடர்ந்து 46 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்குள் கர்நாடகத்தில் அணைகள் கட்டி பாசனப் பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது.

    அணைகளைக் கட்டியதன் மூலம் தண்ணீரைத் தேக்கி நமக்குத் தர மறுக்கின்றனர். இதை மத்திய அரசும் தடுத்து நிறுத்தவில்லை. இதற்கு மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மறைமுகமாகத் துணை நின்றார். இந்திராகாந்தி முதல் மன்மோகன்சிங் வரை பிரதமர் பதவி வகித்த 9 பேரும் காவிரி பிரச்னையில் நமக்கு நியாயம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்னையில் உச்ச நீதிமன்றம்தான் 7 முறை தலையிட்டு நமக்குத் தீர்ப்பு அளித்தது. மேலும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அகில இந்தியக் கட்சிகளும் இதை கண்டிக்கவில்லை. கர்நாடகத்தில் உள்ள அகில இந்தியக் கட்சிகள் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என வலியுறுத்துகின்றனர். இங்குள்ள அகில இந்திய கட்சிகள் பட்டும்படாமல் ஆதரவு அளித்துவிட்டு தலைமையிடம் கண்டிப்புடன் வலியுறுத்தவில்லை.

    விவசாயிகளின் சக்தி மிகப்பெரியது. எனவே, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும். இதை இந்தத் தலைமுறையினர் செய்யத் தவறினால் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்றார் நெடுமாறன். காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்தி பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai