சுடச்சுட

    

    பள்ளி மாணவியிடம் பாலியல் வன்முறை: ஆசிரியருக்கு முன் ஜாமீன் மறுப்பு

    By dn  |   Published on : 02nd March 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த ஆசிரியரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரின் மகள் சுலைகா (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மாணவிகள் விடுதியில் தங்கி வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தார்.

    அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் முத்தையன். இவர் அந்த மாணவியை கடத்தி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த மாணவியை அவரது சொந்த ஊருக்கு பஸ்ஸில் அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியின் தாய் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் முத்தையன் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்குரைஞர் ஆஜராகி, மனுதாரர் குற்றமற்றவர். அவர் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. அந்தப் பெண் மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பெற்றோருடன் செல்வதற்கு அவர் தயக்கம் காட்டியதால் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். எனது மனுதாரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார்.

    அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆஜராகி, மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தெரியவந்தது என வாதாடினார்.

    விசாரணைக்குப் பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் ஒரு ஆசிரியர். அவருக்கு தமிழ் கலாசாரம் முழுவதும் நன்கு தெரிந்திருக்கும். அந்தப் பெண்ணுக்கு பாதுகாவலராக இவர் நடித்திருக்கிறார்.

    மனுதாரர் அவரது வரையறையைத் தாண்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.

    அந்தப் பெண் அவரது பெற்றோருடன் செல்வதற்கு தயக்கம் காட்டினார் எனக் கூறுவதால், மனுதாரர் குற்றத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார் எனக் கூற முடியாது. மேலும், மனுதாரருக்கு எதிராகக் கூட குற்றம் சுமத்தப்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவம் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்துள்ளது.

    இந்த நீண்ட கால இடைவெளியில் மனுதாரர் முன்ஜாமீன் கோரவில்லை. அதனால் மனுதாரரை காவலில் எடுத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம். மேலும், மருத்துவப் பரிசோதனை செய்து அவர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடத் தகுதியானவரா எனக் கண்டறிய வேண்டும். இவையனைத்து காரணங்களுக்காக மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai