சுடச்சுட

    

    மதுரையில் காங்கிரஸ் அலுவலகம் முன் போலீஸ் குவிப்பு: கொடியை எரித்த 10 மாணவர்கள் கைது

    By dn  |   Published on : 02nd March 2014 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை சத்தியமூர்த்தி பவனை தமிழ் அமைப்புகள் முற்றுகையிட்டதை தொடர்ந்து மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான போலீஸார் சனிக்கிழமை குவிக்கப்பட்டனர். மேலும், காங்கிரஸ் கொடியை எரிக்க முயன்ற 10 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான சர்ச்சையில் மத்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்து கடந்த சில நாள்களாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டபோது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மதுரையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மதுரை காமராஜர் சாலை சந்தைப்பேட்டையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக தகவல் பரவியது. இதனால், அலுவலகம் முன் வஜ்ரா வாகனம், இரும்புத் தடுப்புகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

    மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் மூத்த வழக்குரைஞர் சேதுராமன், இளைஞரணி ஜெய்ஹிந்த்புரம் வி.முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். போராட்டம் நடத்துவோரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசமாகக் கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களைச் சமரசம் செய்தனர்.

    மாணவர்கள் கைது: காங்கிரஸ் அலுவலகம் முன் போலீஸ் குவிக்கப்பட்ட நிலையில், கோரிப்பாளையம் பகுதியில் திடீரென தமிழ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முகிலன் தலைமையில் கூடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கொடியை எரிக்கவும் முயன்றனர். உடனே அங்கிருந்த போலீஸார் முகிலன் உள்ளிட்டோரை கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai