Enable Javscript for better performance
மோடி பிரதமராக ஈழத் தமிழர்கள் விருப்பம்: வைகோ- Dinamani

சுடச்சுட

    
    book_release

    இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வர வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் விருப்பமாக உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

    காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் நடத்தி வரும் ரெüத்திரம் இதழின் 2-ஆம் ஆண்டு துவக்க விழாவில் வைகோ பேசியது:-

    விடுதலைப் புலிகள் போரில் வெல்ல முடியாத படைகளைக் கொண்டவர்கள்.ஆனால் இலங்கை அரசுக்குப் படைகளையும், ஆயுதங்களையும் வழங்கி, திட்டங்களையும் இந்தியா வகுத்துக் கொடுத்ததால்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்றனர். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இலங்கை அரசுக்கு எந்த வகையிலும் ஆயுதம் தரமாட்டோம் என்று உறுதியாக முடிவு எடுக்கப்பட்டு, தரப்படவும் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்திலேயே இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

    அப்படித் தமிழர்களுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஈழத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

    இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்றே ஈழத் தமிழர்கள் விரும்புகின்றனர்.

    நாடு முழுவதும் மோடியின் அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜக கட்சி, 272 இடங்களுக்கு மேல் தனித்தே வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும். பாஜகவை மதவாத கட்சி என்று சிலர் அரசியல் ஆதாயத்துக்காகச் கூறுகின்றனர். 1999-ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, பொதுவான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் மதச்சார்பற்ற தன்மையோடு செயல்படுவோம், சமூகநீதியைக் காப்போம் என்று வலியுறுத்தப்பட்டன. அப்படி காக்கக்கூடிய அரசாகவும் வாஜ்பாய் தலைமையிலான அரசு விளங்கியது. அதைப்போலவே மோடி தலைமையிலான அரசும் செயல்படும். எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்தந்த மாநிலத்தின் சூழலுக்கேற்ப மோடி பேசி வருகிறார். வண்டலூரில் கூட்டாட்சி தத்துவம் தொடர்பாகப் பேசினார். இது தொடர்பாக அவரிடம் பேசியபோது, தமிழ் மண்ணில் கூட்டாட்சி பற்றி பேசாமல் இருக்க முடியுமா என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.

    எல்லா மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்து பேசும் ஆற்றல், இந்தியாவில் மோடிக்கு மட்டுமே இருக்கிறது. சுதந்திர ஈழமே எங்களின் இலக்கு. அதற்கான சூழல் கனிந்து வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் இல்லை என்று இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் விடுதலைப் புலிககள் மீதான தடை நீங்கும்.

    இந்தியாவிலும் விடுதலைப்புலிகளான தடை நீங்கும். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, அமையப் போகும் பாஜக ஆட்சியில் அந்தச் சூழல் உருவாகும் என்றார் வைகோ.

    பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai