சுடச்சுட

    

    ராட்சத அலையில் சிக்கி படகு சேதம்: 5 மீனவர்கள் உயிர் தப்பினர்

    By dn  |   Published on : 02nd March 2014 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    boat_sink

    கடலூரில் கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலைகளில் சிக்கிதரைதட்டிய விசைப் படகு, பாறையில் மோதி சேதமடைந்தது. படகில் இருந்த 5 மீனவர்களும் வெளியே குதித்து போராடி கரை சேர்ந்தனர்.

    கடலூர் துறைமுகம் அருகே சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (40), பாண்டியன் (38), ரவி (28) உள்பட 5 பேர், விசைப் படகில் மீன்பிடிக்க வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இரவு முழுவதும் மீன் பிடித்துவிட்டு, சனிக்கிழமை அதிகாலை துறைமுகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அமாவாசை தினம் என்பதால் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகவும், லேசான பனிமூட்டமும் காணப்பட்டது. இதனால் முகத்துவாரப் பகுதியில் படகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    முகத்துவாரப் பகுதியில் அதிகளவு மணல் சேர்ந்திருந்ததால் படகு தரை தட்டியது. படகை மீட்க மீனவர்கள் போராடினர். அப்போது எதிர்பாராதவிதமாக அலையின் சிற்றத்தில் படகு கவிழ்ந்தது.

    பின்னர் எழுந்த ராட்சத அலைகளால் அதிவேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட படகு, முகத்துவாரப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த கருங்கல் பாறைகளின் மீது மோதியது. அப்போது படகில் இருந்த 5 மீனவர்களும் வெளியே குதித்து போராடி கரை சேர்ந்தனர். பாறையில் மோதிய வேகத்தில் படகு உடைந்து நொறுங்கியது. இதனால் படகிலிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.

    உயிர் தப்பிய மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரப் பகுதியில் இருந்த விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. ராட்சத அலைகளால் படகு உடைந்து விட்டது. முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்தாததால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. படகையும் சேர்த்து ரூ.7 லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai