சுடச்சுட

  

  குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவே வாடகை வீட்டில் குடியிருப்போரின் விவரங்களை சேகரிப்பதற்கு உத்தரவிடப்பட்டதாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  வாடகை வீட்டில் குடியிருப்போரின் விவரங்களை 60 நாள்களுக்குள் வழங்குமாறு வீட்டு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகர போலீஸ் ஆணையரகம் உத்தரவிட்டிருந்தது.

  இதை எதிர்த்து வழக்குரைஞர்கள் எம்.துரைசெல்வன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தனர்.

  இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (பிப்.25) விசாரணைக்கு வந்தது.

  விசாரணையின் போது சென்னை மாநகர கூடுதல் ஆணையர் சங்கர் தாக்கல் செய்த பதில் மனு விவரம்:

  வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் வங்கிக் கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் பலர் தங்களின் உண்மையான முகவரியைக் கொடுக்காமலும், உரிய அடையாளத்தை தெரிவிக்காமலும் அந்தப் பகுதியில் வாடகைக்கு குடியிருந்தது கண்டறியப்பட்டது.

  வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்த அவர்கள், பணத்துக்காக சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, வாடகைக்கு குடியிருப்பவர்களின் உண்மையான தகவல்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதில் சட்ட மீறல் எதுவும் இல்லை. இதன் மூலம் குற்றவாளிகளை முன்கூட்டியே அடையாளம் தெரிந்து குற்றங்களைத் தடுக்க முடியும். பொது அமைதியை பாதுகாக்க முடியும். இது போன்ற உத்தரவுகள் தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற மாநகரங்களில் நடைமுறையில் உள்ளது.

  இதுவரை 52 ஆயிரம் பேர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை தவறாக பயன்படுத்தப்படவில்லை. வாடகைக்குக் குடியிருப்போர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த விவரங்கள் சேகரிக்கவில்லை.

  அவர்கள் குடியிருந்த முகவரி குறித்து தெரிந்துகொண்டால் சட்டத்தையும், அமைதியையும் பாதுகாக்க முடியும். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai