சுடச்சுட

    
    office

    ராமேசுவரம் பகுதிகளிலிருந்து சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பிய 41 படகுகள் மீது இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்ததாக மீன்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர்.

    ராமேசுவரம் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாகவும், இதனால் கடல் வளத்தையும், மீன் வளத்தையும் சேதப்படுத்துவதாகவும் ராமேசுவரம் மீன்துறை அதிகாரிகளிடம் புகார்கள் வந்தன. இதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் மீன் துறை உதவி இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் துறைமுகக் கடற்கரைப் பகுதிக்கு சென்று 41 படகுகள் இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்துள்ளனர்.

    இது குறித்து மீனவர் சங்கத் தலைவர் கூறும்போது, மீன்துறை அதிகாரிகள் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மற்றும் படகுகளை கடலில் நேரில் சென்று சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்களாகவே 41 படகுகள் மீது வழக்குப் பதிந்து உள்ளனர். அப்பாவி மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து மீன்துறை அதிகாரியிடம் கேட்டபோது அவர் பதில் கூற மறுத்து விட்டார்.

    ராமேசுவரம் துறைமுக அலுவலகம் முற்றுகை: மீன் துறை அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்து மீனவர்கள் துறைமுக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி 16 நாள்கள் கழித்து சனிக்கிழமை காலையில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மீது, அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பேசாளை மீன்களைப் பிடித்து வந்ததாகக் கூறி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து துறைமுக அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர், உயர் அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் மீனவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து மீனவர் சங்கத் தலைவர் ஜேசு கூறியது: கரை திரும்பிய மீனவர்கள் மற்றும் படகுகள் மீது இரட்டைமடி வலைகளை வைத்து மீன் பிடித்து வந்ததாக மீன் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த மாதம் கடலில் பேசாளை மீன்கள் அதிகமாக உற்பத்தி இருப்பதால், எந்த வலைகளை கடலில் விரித்து மீன் பிடித்தாலும் பேசாளை மீன்கள் அதிகமாக கிடைக்கும். அப்படி பிடிக்கப்பட்ட மீன்களை கடலில் வீச முடியாது. கரைக்குத் தான் கொண்டு வர முடியும். ஆனால், மீன்துறை அதிகாரிகள் தவறான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் நடவடிக்கை வருங்காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

    இரட்டை மடி பயன்படுத்தும் மீனவர்கள் மீது மீன்துறை அதிகாரிகள் கடலில் சென்று படகில் சோதனையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்ட படகுகள் காலையில் 6 மணிக்கு கரைக்கு திரும்பி வந்தும் மதியம் ஒரு வரை கடலிலேயே படகுகளை நிறுத்தி வைத்ததால், விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மீன்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக படகு ஒன்றுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai