சுடச்சுட

    

    ராமேசுவரம், பாம்பன் பகுதிகளிலிருந்து பிப்ரவரி 1, 3 ஆகிய தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க ராமேசுவரம், பாம்பன் பகுதி காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் செய்தனர். உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, பல பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ராமேசுவரம் பகுதியிலிருந்து மீனவர்கள் சகாயராஜ், ஜேசுராஜ், பி.ஜி. சேகர் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் தூக்கி வீசியும், மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தியும் விரட்டியடித்தனர்.

    பாதிக்கப்பட்ட மீனவரான சகாயராஜ், இதுதொடர்பாக பிப்ரவரி 28 ஆம் தேதியும், மற்ற இரு மீனவர்களும் சனிக்கிழமை ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதுபோல, பிப்ரவரி 3 ஆம் தேதி பாம்பன் பகுதியிலிருந்து ஜான் பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர், பிப்ரவரி 28 ஆம் தேதி பாம்பன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இரு காவல் நிலையங்களிலும் புகார்களை பெற்றுக் கொண்ட போலீஸார், இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் மீது இந்தியச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தாக்குதல் நடத்தியது, ரத்தக் காயம் ஏற்படுத்தியது, வழிமறித்தல், பொருள்களைச் சேதப்படுத்தியது, ஆயுதத்தைக் காட்டி மிரட்டியது உள்பட பல பிரிவுகளில் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai