Enable Javscript for better performance
காமராஜர் துறைமுகத்தில் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை: அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்- Dinamani

சுடச்சுட

  

  காமராஜர் துறைமுகத்தில் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை: அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்

  By dn  |   Published on : 03rd March 2014 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  statue

  எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிறுவப்பட்டுள்ள முழு உருவ காமராஜர் வெண்கலச் சிலையை கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

  மத்திய அரசின் 13-வது பெரிய துறைமுகமான எண்ணூர் துறைமுகம் கடந்த புதன்கிழமை முதல் காமராஜர் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  இதனையடுத்து காமராஜரின் முழு உருவச் சிலை துறைமுக நிர்வாக அலுவலக கட்டடம் எதிரே நிறுவப்பட்டது. 350 கிலோ வெண்கலத்தினால் ஆன 9 அடி முழு உருவச் சிலை மற்றும் பீடம் அமைப்பதற்கான ரூ.9 லட்சம் செலவினை கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசனே ஏற்றுக் கொண்டார்.

  இச்சிலை திறப்பு விழா காமராஜர் துறைமுகத் தலைவர் எம்.ஏ. பாஸ்கராச்சார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.

  இதில் கலந்து கொண்டு அமைச்சர் ஜி.கே.வாசன் காமராஜர் சிலையைத் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் வாசன் பேசியது, காமராஜரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அவரது முழு உருவச் சிலை இங்கு திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய வளர்ச்சிக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்டவர் காமராஜர். அவரது ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து நீண்ட பட்டியலிடலாம்.

  அவரது ஆட்சியில் தான் கிராமங்கள்தோறும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டன. உலக அளவில் புகழ்பெற்ற இத்திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 12.50 கோடி மாணவ, மாணவியர் பயனடைகின்றனர். இதற்கென ஆண்டுக்கு ரூ.13,215 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. மாணவர்களிடையே ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு வரக்கூடாது என்பதால் சீருடைத் திட்டத்தை காமராஜர் அறிமுகம் செய்துவைத்தார்.

  ஆறுகள் தோறும் அணைக்கட்டுகள்: காமராஜர் ஆட்சியில்தான் ஆறுகள் தோறும் அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் ஆழியாறு, வைகை, மணிமுத்தாறு, பவானிசாகர் உள்ளிட்ட அணைகள் அவரது ஆட்சிகாலத்தில்தான் கட்டப்பட்டன. மேலும் அவரது ஆட்சி காலத்தில் நகரங்கள் தோறும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் (என்.எல்.சி), திருச்சியில் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவைகள் காமராஜர் ஆட்சியின் சாதனைகள் ஆகும். தமிழத்தின் கல்வி, தொழில், விவசாயத் துறை வளர்ச்சியில் காமராஜரின் பங்கு மகத்தானது.

  காமராஜர் ஒரு சகாப்தம்: காமராஜர் என்றால் அது வரலாறு, சகாப்தம். இந்திய மக்களால் நேசிக்கபட்ட மாபெரும் தேசியத் தலைவர் காமராஜர்.

  எனவே இந்தியத் துறைமுகங்களில் வேகமாக வளர்ந்து எதிர்காலத்தில் முதன்மைத் துறைமுகமுகமாக விளங்கப் போகும் எண்ணூர் துறைமுகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது பொருத்தமான ஒன்றாகும்.

  இங்கு இச்சிலை நிறுவப்பட்டுள்ளதன் மூலம் காமராஜரின் தாரக மந்திரமான எளிமை, நேர்மை, தூய்மை உள்ளிட்டவை இத்துறைமுக நிர்வாகத்தில், இத்துறைமுகத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் மேலோங்கி நிற்கும் என நம்புகிறேன்.

  இதன் அடையாளமாக இங்கு பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 120 பெண்களுக்கான ஊதியத்தை 20 சதவீதம் உயர்த்தி வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்க காமராஜர் துறைமுக நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது என்றார் வாசன்.

  சிலை திறக்கப்பட்ட பிறகு அமைச்சர் வாசன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடைகளை அமைச்சர் வழங்கினார். சிலையை சிறப்பாக வடிவமைத்தற்காக சிற்பி நாகப்பா ஜெகநாதனுக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர் வாசன் நன்றி தெரிவித்தார்.

  நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, கப்பல்துறை இணைச் செயலாளர் என்.முருகானந்தம், அமைச்சக சிறப்பு அதிகாரி சிரு, காமராஜர் துறைமுக இயக்குனர் சஞ்சய் குமார், பொது மேலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் சக்கரபாணி ரெட்டியார், சக்தி வடிவேலு, வழக்கறிஞர் தர்மராஜ், டாக்டர் ராஜ்மோகன், எண்ணூர் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai