சுடச்சுட

    

    கொழும்பில் தமிழக-இலங்கை மீனவர்களிடையே 13-ஆம் தேதி பேச்சுவார்த்தை

    By dn  |   Published on : 03rd March 2014 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayalalitha2

    தமிழக, இலங்கை மீனவர்களிடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கொழும்புவில் மார்ச் 13-ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இலங்கை கடற்படையினரால் ஜனவரி 27-க்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட 121 தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இருதரப்பு மீனவர்களுக்கு இடையே முதல்கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் ஜனவரி 27-ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமிழக மீனவர்கள் 295 பேரும், புதுச்சேரி மீனவர்கள் 22 பேரும் இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, இப்போது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    தமிழக, இலங்கை மீனவர்களிடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியதோடு, இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவு இணைச் செயலாளருக்கு மார்ச் 2-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    இந்தக் கடிதத்தில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 121 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தப் பேச்சுவார்த்தையை ஏற்கெனவே நடைபெற்ற பொருள் நிரல்கள் அடிப்படையிலேயே நடத்த வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    விவாதப் பொருள்

    * தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான பாக் நீரிணைப்பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையை பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடித்திடும் பாரம்பரிய உரிமையை வலியுறுத்துதல்.

    * முந்தைய இந்திய, இலங்கை பேச்சின்போது ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல், சிறைபிடிப்பு, நீண்டகால சிறைவாசம், மீன்பிடி படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

    * இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்படும் மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விரைவாகவும் சுமூகமாகவும் நாடு திரும்புவதற்கான வழிவகைகள் குறித்து விவாதித்தல்.

    * பாரம்பரிய கடல் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உகந்த மீன்பிடி முறைகளை தெரிவித்தல்.

    * முக்கியத் தகவல்களான ஆபத்துக்கால நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மீன்பிடி முறைகள், அதுதொடர்பான தகவல்களை இருதரப்பினரும் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாக் நீரிணைப் பகுதியில் மீன் மற்றும் மீன் வளங்களை நீண்டகால வாழ்வாதாரத்துக்கு ஏற்ற வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற்கொள்ளும் வகையிலும் வழிமுறைகளைக் கண்டறிதல் ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

    முதல்வர் ஜெயலலிதாவால் கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் எனவும், இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழக அரசின் ஒப்புதலுக்குப் பிறகே செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

    கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் யார், யார்? மீனவப் பிரதிநிகளில் தமிழகத்தின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவஞானம், ஜி.வீரமுத்து, எஸ்.சித்திரவேலு மற்றும் எம்.ஜெகநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜமாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த என்.குட்டியாண்டி, ஜி.ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜேசுராஜா, யு.அருளானந்தம், எம்.எஸ்.அருள், எஸ்.பி.ராயப்பன் மற்றும் என்.தேவதாஸ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.இளங்கோ ஆகியோர் பங்கேற்பார்கள் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள்.

    தமிழக அரசின் சார்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலாளர், மீன் வளத்துறை இயக்குநர், கூடுதல் இயக்குநர் மற்றும் துறை அதிகாரிகள் பார்வையாளர்களாக பங்கேற்பார்கள்.

    இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இலங்கைச் சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai