சுடச்சுட

    
    jayemder_gurumurthy

    பாரம்பரிய கலாசாரத்தை விட்டு விலகியதால் தான் சமூகத்தில் சீர்கேடுகள் மிகுந்து விட்டன என்று பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.

    ஸத்ஸம்ஹிதாவின் சிந்தனை சங்கமம் நிகழ்ச்சி சென்னை பாரதீய வித்யா பவனின் ஒத்துழைப்போடு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், பாரம்பரியமான வாய்வழியாக வேதம் ஓதும் முறையில் வேதங்களைப் பயிற்றுவிக்கும் வேத பாடசாலைகளுக்கு சமுதாயம் என்னென்ன பணிகளை ஆற்றவேண்டும், அவ்வாறு அப்பாடசாலைகளுக்கு உதவுவதால் சமூகத்துக்கு என்னென்ன நன்மைகள் விளைகின்றன ஆகியவை பற்றி பல அறிஞர்கள் உறையாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளரும், ஸத் ஸம்ஹிதாவின் நிறுவன அறங்காவலருமான எஸ். குருமூர்த்தி கூறியது:

    வேதங்கள் வாய்வழியாக மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. நாட்டின் பாரம்பரிய குடும்ப அமைப்பின் மூலமே இந்தத் தலைமுறையினர் வேதங்கள் பற்றியும், அதனால் விளையும் நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. உலகம் உருவாகி 433 கோடி ஆண்டுகள் ஆகின்றன என வேதங்கள் கூறுகிறது. சமீபத்தில் "பிக்பேங்க்' தேற்றம் மூலம் உலகம் தோன்றி 439 கோடி ஆண்டுகள் ஆகின்றன என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உலகில் 87 லட்சம் ஜீவராசிகள் வாழ்கின்றன என வேதம் சொல்கிறது. 2011-இல் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில் 85 லட்சம் ஜீவராசிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்கள் நிறைந்த வேதங்களை நாம் அறிந்து கொள்வது என்பது பாரம்பரிய கலாசாரம் மிகுந்த நமது நாட்டில் மட்டுமே சாத்தியம்.

    நாம் நமது பாரம்பரியமான கலாசாரத்தை விட்டு அதிகதூரம் விலகி விட்டதால்தான் சமூகத்தில் சீர்கேடுகள் மலிந்துவிட்டன. பாரம்பரியமான வேதங்களை மதிப்பதன் மூலம் நாம் இழந்ததை எல்லாம் மீண்டும் பெற முடியும் என்று கூறினார்.

    இதில், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது:

    காஞ்சி மடத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான வேதபாடசாலைகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை நிறுவப்பட்டுள்ளது. வேதத்தை காப்பாற்றுவதற்கும் வேதம் ஓதும் வேதியரை காப்பாற்றுவதற்கும் ஸ்ரீ காஞ்சி மடம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. ஸத் ஸம்ஹிதா செய்து வரும் சேவைகளை பாராட்டுகிறேன் என்றார். மேலும், ஸத் ஸம்ஹிதா அமைப்பானது வேதபாடசாலைகளில் வேதம் பயின்றுவரும் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்சிக்காக பாடுபடக்கூடிய இயக்கமாக மாற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    தகவல் தொடர்பு ஊடகங்கள் வேதத்தைப்பற்றியும், வேதம் ஓதும் அந்தணர்களைப் பற்றியும் ஆக்கப்பூர்வமான தகவல்களை வெளியிடவேண்டுமென்று பத்திரிகையாளர் ந.ரவி வலியுறுத்தினார். கோவை பாரதீய வித்யா பவனின் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர், வேதமும், வேதாந்தமும் அனைத்து மக்களின் நன்மைக்காகவே ஏற்பட்டிருக்கின்றன என்று கூறினார்.

    முன்னதாக, இதில் வேத பாடசாலைக் கல்வி பற்றிய "டைம்ùஸஸ் எஜூகேஷன் - மாடர்ன் டைம்ஸ்' என்ற புத்தகத்தை காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட முதல் பிரதியை பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி என்.கோபாலசுவாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai