Enable Javscript for better performance
\\\"தலித்துகளுக்கு எதிரான இயக்கமல்ல பாமக\\\'- Dinamani

சுடச்சுட

  
  ramadoss_bookrelease

  தலித்துகளுக்கு, பாமக எதிரான இயக்கமில்ல என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

  சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், "சாதனை மனிதர் அன்புமணி ராமதாஸ்' என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் அன்புமணி இருந்தபோது அவரால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொகுப்பே இந்நூல். இதன் வெளியீட்டு

  விழாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் பெற்றுக்கொண்டார்.

  விழாவில் அன்புமணி பேசியது:-

  "குடியரசுத் தலைவருக்கு என்னவிதமான மருத்துவச் சிகிச்சை கிடைக்கிறதோ, அதே சிகிச்சை கிராமத்தில் உள்ளோருக்கும் கிடைக்க வேண்டும்' என்று மத்திய அமைச்சராக நான் (அன்புமணி) பொறுப்பேற்றதும், ராமதாஸ் வலியுறுத்தினார்.

  அதன்படி, தொடங்கப்பட்டதுதான் தேசிய ஊரகச் சுகாதார இயக்கம். இந்தத் திட்டம் இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறை அமைப்பையே தலைகீழாக மாற்றியது.

  108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வந்தேன். 108 என்ற எண் ராணுவத்துக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தது. அதைக் கேட்டுப் பெற்றேன். இந்தத் திட்டத்தால், பிரசவ வேளையில் தாய் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் பாதியாக குறைத்துள்ளது. இப்போது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை சிலர் தாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

  கருணாநிதி எதிர்ப்பு: பொது இடங்களில் பீடி, சிகரெட் பிடிப்பதற்குத் தடை விதித்தேன். சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை செய்யும் படங்கள் வைப்பதைக் கட்டாயமாக்கினேன். இது தொடர்பான ஆணையைப் பிறப்பித்தபோது, முதல்வராக இருந்த கருணாநிதி உள்பட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறியே கொண்டு வந்தேன்.

  திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கும், மது அருந்தும் காட்சிகளுக்கும் தடை விதித்தோம். இதை முதலில் சொல்லியபோது, அன்புமணியின் முடிவு கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறினர்.

  பிறகு உலக சுகாதார நிறுவனமே அதற்கு தடைவித்திக்க வேண்டும் என்று தெரிவித்தபோதுதான் நான் கூறியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

  தலித்துகளுக்கு எதிரியில்லை: பாமக, ஏதோ தலித்துகளுக்கு எதிரான இயக்கம் என்பதுபோல சிலர் கூறுகின்றனர். நாங்கள் எப்போதும் தலித்துகளுக்கு எதிரானவர்கள் இல்லை. தலித்துகளுக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில், அந்த மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் சிலரைத் தான் எதிர்க்கிறோம்.

  "எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குநர் வேணுகோபாலுக்கும், எனக்கும் பிரச்னைதான். "எய்ம்ஸ்' மருத்துவக் கல்லூரியில் தலித் மாணவர்கள் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இதற்குக் காரணம் வேணுகோபால். அதை எதிர்த்தேன் என்பதாலேயே அவருக்கும் எனக்கும் பிரச்னை. மேலும், மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முது நிலை மருத்துவப் படிப்புகளில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இதை யாருமே கண்டுகொள்ளவில்லை. நானே போராடி தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தேன். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த பூட்டாசிங், இதற்காக சென்னையில் எனக்குப் பாராட்டு விழாவே நடத்தினார்.

  எனவே, தலித்துகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

  2016-இல் பாமக ஆட்சி அமைத்ததும் எங்களின் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாகத்தான் இருக்கும் என்றார் அன்புமணி.

   

  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "சாதனை மனிதர் அன்புமணி ராமதாஸ்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) பாமக நிறுவனர் ராமதாஸ், ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai