Enable Javscript for better performance
தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

  

  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் இருந்து திங்கள்கிழமை தொடங்குகிறார்.

  காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே காமராஜர் சாலையில் மாலை 3 மணிக்கு அதிமுக சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

  இதற்காக, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் காஞ்சிபுரம் வருகிறார். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளமும் (ஹெலி பேட்) அமைக்கப்பட்டுள்ளது.

  தனது முதல் கட்டப் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கும் அவர், ஏப்ரல் 5-ஆம் தேதி தென்காசி தொகுதிக்குள்பட்ட சங்கரன்கோயிலில் பிரசாரத்தை நிறைவுசெய்கிறார்.

  வரும் தேர்தலில் அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

  மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா அவரது பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியிட்டார். தமது பிரசார பயண விவர அட்டவணையையும் அப்போது வெளியிட்டார்.

  பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: முன்னதாக, முதல்வரின் பாதுகாப்பு தனிப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜராஜன், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்துக்கு சென்றார். நத்தப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தைப் பார்வையிட்ட அவர், பிரசார மேடை அமைந்துள்ள இடத்தையும் ஆய்வு செய்தார்.

  பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சில மாற்றங்களை செய்யுமாறு தேர்தல் பொறுப்பாளர்கள் மைத்ரேயன் எம்.பி., அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ., ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.

  மேலும் யார், யாருக்கு எந்தப் பகுதியை ஒதுக்குவது என்பது குறித்தும் அவர்களிடம் பேசினார். அப்போது காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் மொளச்சூர் இரா. பெருமாள், மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸார்: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஐ.ஜி. மஞ்சுநாதா தலைமையில் நடைபெற்றது. டி.ஐ.ஜி. சத்யமூர்த்தி மேற்பார்வையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 7 ஏ.டி.எஸ்.பி.கள், 30 டி.எஸ்.பி.கள்., 60 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என மொத்தம் 1,500 போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

  போக்குவரத்து மாற்றம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு செங்கல்பட்டு, தாம்பரம், கல்பாக்கம், ஆரணி, செய்யாறு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் காமராஜர் சாலை வழியாக வந்து, வணிகர் வீதியில் திருப்பி விடப்பட்டு கச்சபேஸ்வரர் கோயில், அன்னை இந்திராகாந்தி சாலை வழியாக பஸ்நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. பஸ்நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் வழக்கம் போல் அதற்கான தடத்தில் செல்லும்.

  சிறப்பு வரவேற்பு ஏற்பாடு: முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் கட்சியினர் நத்தப்பேட்டை பகுதியில் இருந்து காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்காரத் தோரண வாயில்கள், கட்சி கொடிகள், பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai