சுடச்சுட

  

  நாகை தொகுதியை குறிவைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

  By எம். சங்கர்  |   Published on : 03rd March 2014 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக கூட்டணியில் நாகை மக்களவைத் தொகுதி பெறுவதில் தீவிர முனைப்புடன் உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

  தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சாதகமாக மாறிய தொகுதி நாகை (தனி) மக்களவைத் தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தொகுதி தேர்தல்களில் இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

  1989-ம் ஆண்டில் திமுக - இடதுசாரிகள் கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் தோல்வியடைந்த நேரத்திலும், அந்தக் கூட்டணி வெற்றி பெற்ற ஒரே தொகுதி நாகை (தனி) தொகுதி. வெற்றி பெற்றவர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு.

  இதைத்தொடர்ந்து, 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வெற்றி பெற்றது.

  1971 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளின் மூலம் நாகை தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்டது.

  கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கூட்டணி இல்லாத நிலையில், 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் நாகை தொகுதியில், கம்யூனிஸ பாரம்பரியம் கொண்டவரைக் கொண்டே வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்ட திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகியாக இருந்து, திமுகவில் இணைந்த ஏ.கே. சுப்பையாவின் மகனான ஏ.கே.எஸ். விஜயனை களமிறக்கினார்.

  திமுக தலைவர் திட்டமிட்டதைப் போன்றே திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை விட 22,446 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

  தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஏ.கே.எஸ். விஜயன், தொகுதியில் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கிக் கொண்டார். அதன் விளைவாக, 2004-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளரையும், 2009-ம் ஆண்டு தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரையும் வெற்றி கண்டார்.

  தற்போது, இடதுசாரிகள் - அதிமுக கூட்டணி உருவாகியுள்ள நிலையில், கடந்த 24-ம் தேதி 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. இருப்பினும், இடதுசாரிகளுடனான தொகுதி உடன்பாபாட்டுக்குப் பின்னர், இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார் எனவும் அவர் அறிவித்தார்.

  அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ள தொகுதிகளில் ஒன்று நாகை தொகுதி. தங்கள் செல்வாக்கை மீட்டெடுக்க நாகை தொகுதியைப் பெற வேண்டும் என நாகை, திருவாரூர் மாவட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மாநிலத் தலைமையை வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

  இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

  கட்சியின் நாகை மாவட்டச் செயலரும், நாகை தொகுதியில் 3 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்வுப் பெற்றவருமான எம். செல்வராசு, கட்சியின் மாநில துணைச் செயலர்களில் ஒருவரும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வுப் பெற்றவருமான ஜி. பழனிச்சாமி ஆகியோர் நாகை தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

  இதைத்தவிர, திருவாரூர் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவரான வை. செல்வராஜ், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்களான ஆர். இடும்பையன், லெனின் ஆகியோரும் நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  எனினும், மாநிலக் குழு விவாதத்தில் கருத்து உடன்பாட்டுடன் எடுக்கப்படும் முடிவே வேட்பாளரைத் தீர்மானிக்கக் கூடியது என்பதால், வேட்பாளர் தேர்வைவிட, நாகை தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை, திருவாரூர் மாவட்டக் குழு நிர்வாகிகள் மிகுந்த முனைப்புக் காட்டி வருகின்றனர்.

  அறிவிக்கப்பட்ட 40 வேட்பாளர்களையும் முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசியபோது, நான்கு வேட்பாளர்களை மட்டும் கடைசியாக சந்திக்கலாம் என்று கூறினாராம். அதில் நாகை தொகுதி வேட்பாளரும் ஒருவர் என்று கூறப்படுகிறது. முதல்வர் குறிப்பிட்ட 4 தொகுதிகளும் கூட்டணிக்கு விட்டுத் தரப்படலாம் என்று கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai