சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்: 8.26 லட்சம் பேர் எழுதுகின்றனர்

    By dn  |   Published on : 03rd March 2014 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.

    மார்ச் 25-ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.

    தேர்வுக் கூடத்தில் முதல் 5 நிமிடங்களில் விடைத்தாளில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கவும், அடுத்த 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும் அவகாசம் வழங்கப்படும்.

    பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 4.45 லட்சம் பேர் மாணவிகள், 3.80 லட்சம் பேர் மாணவர்கள் ஆவர். மாணவர்களை விட 65 ஆயிரம் மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர்.

    தனித்தேர்வர்களாக 53,629 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த ஆண்டு 2,242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 75 ஆயிரம் பேர் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    சென்னையில் 408 பள்ளிகளிலிருந்து 53,294 பேரும் புதுச்சேரியில் 120 பள்ளிகளில் 13,528 பேரும் எழுதுகின்றனர்.

    புழல் மத்திய சிறையில் உள்ள தேர்வு மையத்தில் 58 சிறைவாசிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.

    பறக்கும் படைகளில் 4 ஆயிரம் பேர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களைக் கண்காணிக்க பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பறக்கும் படைகளில் இடம் பெற்றுள்ளனர்.

    ஒரு சில தேர்வு மையங்களில் தேர்வு ஆரம்பித்து முடியும் வரை கண்காணிப்புக் குழுவினர் தேர்வுப் பணிகளைப் பார்வையிடுவார்கள். தேவைப்பட்டால், ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் பிற மாவட்டங்களிலிருந்து குழுக்களைப் பெற்று மையங்களைப் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, மாவட்டந்தோறும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், இணை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வுத்துறை எச்சரிக்கை: விடைகள் எழுதப்பட்ட துண்டுத்தாள் வைத்திருத்தல், பார்த்து எழுத முயற்சித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றம், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற செயல்கள் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். எனவே, மாணவர்கள் எந்தவொரு ஒழுங்கீனச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் முறைகேடான செயல்களில் ஈடுபட்ட 397 பேர் தண்டனைகளைப் பெற்றுள்ளனர்.

    தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமானால் பள்ளி தேர்வு மையம் ரத்து செய்யப்படும்.

    பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் பரிந்துரை செய்

    யப்படும். பிளஸ் 2 தேர்வு நடைபெறும் தனியார் பள்ளிகளில் தேர்வு நேரத்தில் பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகளோ, பணியாளர்களோ, ஆசிரியர்களோ இருக்கக் கூடாது எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு: இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களின் நேரத்தைச் சேமிக்கவும், கவனம் சிதறாமல் இருக்கவும் விடைத்தாள் புத்தகத்தின் பக்கங்கள் 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதோடு, விடைத்தாள்களில் எந்த விவரத்தையும் மாணவர்கள் எழுத வேண்டியதில்லை. பதிவு எண், புகைப்படம், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விடைத்தாள் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.
     

    பிளஸ் 2 தேர்வு அட்டவணை

     

    மார்ச் 3 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

    மார்ச் 5 - புதன்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

    மார்ச் 6 - வியாழக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

    மார்ச் 7 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    மார்ச் 10 - திங்கள்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்

    மார்ச் 13 - வியாழக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

    மார்ச் 14 - வெள்ளிக்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்

    மார்ச் 17 - திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்

    மார்ச் 20 - வியாழக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்

    மார்ச் 24 - திங்கள்கிழமை - பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்கல்வி பாட எழுத்துத் தேர்வு

    மார்ச் 25 - செவ்வாய்க்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ்,தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai