சுடச்சுட

  

  ஊழலுக்கும் குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி: காஞ்சியில் பிரசாரத்தை தொடங்கி ஜெயலலிதா பேச்சு

  By dn  |   Published on : 04th March 2014 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் மக்களவைத் தேர்தலில் ஊழலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைய வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.

  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் இருந்து திங்கள்கிழமை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

  கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்தேன். அதை நீங்கள் (வாக்காளர்கள்) நிறைவேற்றினீர்கள். என்னை தமிழகத்தின் முதல்வராக ஆக்கினீர்கள்.

  அதேபோன்று, இப்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இதையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, 1947 ஆம் ஆண்டு மக்கள் மனங்களில் என்னென்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வு தான் இப்போதும் நிலவுகிறது. நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்த வெள்ளையர்களை, கொள்ளையர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் அப்போது இருந்தார்கள். சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து இப்போதும் மக்கள் மனதில் அதே எண்ணம் உருவாகியுள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை கொள்ளையடித்து, சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது. பொருளாதாரச் சுமை ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

  எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம், 2-ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

  இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய கடமை.

  ஏறக்குறைய 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழ்நாட்டுக்கு எதையாவது செய்ததா? மக்கள் நலம் என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள் (மக்கள்) நலத்தை மறந்துவிட்டார். இப்படிப்பட்ட கட்சிக்கு இந்தத் தேர்தலில் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்.

  இந்தத் தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் ஊழல்கள் நிறைந்த ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.

  மத்தியில் மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மாநில மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தேசத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றார் ஜெயலலிதா.

   

  மத்திய அரசு இழைத்த 10 துரோகங்கள்

  1. இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை மத்திய அரசு அளித்தது அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது.

  2. இலங்கையில் போர்க்குற்றங்கள் புரிந்தோரை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவும், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவும் வேண்டும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பன உள்பட பல தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இலங்கைக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொண்டது.

  3. இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதைத் தடுக்காதது.

  4. கச்சத் தீவு தொடர்பான வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்தது.

  5. தமிழகத்துக்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை கணிசமாகக் குறைத்தது.

  6. மருத்துவப் படிப்பில் சமூக நீதிக்கு எதிராக பொது நுழைவுத் தேர்வை நுழைக்க முயற்சித்தது.

  7. தமிழகத்துக்குரிய மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுப்பது.

  8. குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு வழங்க மறுப்பது.

  9. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்காமல் காலம் தாழ்த்துவது.

  10. பெட்ரோலியப் பொருள்களின் விலையை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர வழிவகுத்தது என மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு துரோகங்களைச் செய்துள்ளதாகப் பட்டியலிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai