சுடச்சுட

  

  நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், நாகை தொகுதியில் திங்கள்கிழமை தேர்தல் வாக்கு சேகரிப்புப் பணியைத் தொடங்கினார்.

  நாகை (தனி) மக்களவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக டாக்டர் கே. கோபால் அறிவிக்கப்பட்டார். இருப்பினும், நாகை தொகுதியை பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

  அதிமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும். அதில், நிச்சயமாக நாகை தொகுதியும் ஒன்றாக இருக்கும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

  திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், அதிமுகவுடன் சுமுகமாக பேசி தொகுதி உடன்பாடு ஏற்படுத்தப்படும்.

  அதுவரை கட்சியினர் அமைதி காக்க வேண்டும் எனக் கூறியது, நாகை தொகுதியை மனதில் கொண்டு அவர் பேசியதாகவே அக்கட்சியின் நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கருதினர்.

  திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இடைபட்ட 2 நாள்களில் ஏதேனும் சாதகமான முடிவு ஏற்படலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் அடைந்திருந்தனர்.

  இந்த நிலையில், நாகை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் கே. கோபால், திங்கள்கிழமை மாலை திடீரென நாகையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

  நாகை மருத்துவமனை சாலை புதியப் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  இந்திய கம்யூனிஸ்ட் அதிர்ச்சி: அதிமுக வேட்பாளரின் இந்த வாக்குச் சேகரிப்புப் பயணம் தன்னிச்சையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவாக இருந்திருந்தால், அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

  அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல், இந்த வாக்குச் சேகரிப்புப் பயணம் நடைபெற்றிருக்காது என்ற கருத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai