சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிறைவு
By dn | Published on : 04th March 2014 11:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா, திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.
நடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியான கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி தொடங்கியது. 5 நாள் விழாவான நாட்டியாஞ்சலி திங்கள்கிழமை நிறைவு பெற்றது. நிறைவு விழாவுக்கு த.செல்வரத்தின தீட்சிதர் தலைமை வகித்தார். விழாவில் நன்றி தெரிவித்து நாட்டியாஞ்சலி அறக்கட்டளைச் செயலர் ஏ.சம்பந்தம் பேசியது: நாட்டியாஞ்சலி பக்திப்பூர்வமான விழாவாகவும், நாட்டிய உத்ஸவமாகவும் திகழ்கிறது. நாட்டியக்கலை கிராமங்கள் மற்றும் கோயில்களில் இருந்து நகரங்களுக்கு சென்றுவிட்டது. தெய்வீகத்தன்மை போய்விடக்கூடாது என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது இந்த நாட்டியாஞ்சலி. நாட்டியாஞ்சலியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என சிலர் கூறுகின்றனர். நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றமே அங்கீகாரம் அளித்து தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கும்போது அரசு எப்படி ஏற்று நடத்த முடியும்? இந்த நாட்டியாஞ்சலியை எந்த தீயசக்தியும் அழித்துவிட முடியாது என்றார் ஏ.சம்பந்தம்.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் வரவேற்றார். துணைத் தலைவர் வி.பாலதண்டாயுதம், டாக்டர் ஆர்.முத்துக்குமரன், பொருளர் எஸ்.ஆர்.ராமநாதன், இணைச் செயலர் ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈஷா யோகா மைய மாணவிகள் நாட்டியம்: விழாவில் கேரளத்தைச் சேர்ந்த மார்கி மது சாக்கியர் குழுவினரின் கூடியாட்டமும் துபாயைச் சேர்ந்த விம்மி ஈஸ்வரின் குச்சுப்புடி நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் ஜெயங்கொண்டம் இசை, பரதநாட்டிய கலைக்கூடம் மாணவிகள், சிதம்பரம் நடராஜ நாட்டியாலயா மாணவிகள், பெங்களூர் பூர்ணாசுரேஷ்,
கோவை ஈஷா மைய மாணவிகள், ஈஷா யோகா மைய சத்குரு ஜக்கி வாசுதேவின் மகள் ராதேஜக்கி, பிரான்ஸ் ஸ்வாதி ராகவன், புதுச்சேரி சலங்கை நாட்டியப் பள்ளி மாணவிகள், சென்னை அக்ட்சயா ஆர்ட்ஸ் மாணவிகள், பெங்களூர் சின்னிஜோஷி. நாட்டிய கலாமந்திர், பெங்களூர் கலா சம்பூர்ணா, புதுச்சேரி நட்சத்திர நாட்டியாலயா மாணவிகள், நெய்வேலி வர்ஷா ரமேஷ் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.