சுடச்சுட

  

  முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்துக்கு வந்ததைத் தொடந்து காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

  நாடாளுமன்றத் தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து முதல் பிரசாரத்தை தொடங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

  இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். முதல்வரை வரவேற்று நத்தப்பேட்டை ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்து காஞ்சிபுரத்தில் டி.கே. நம்பி தெரு, காந்திசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அழகுத் தோரணங்கள், கட்சிக் கொடித் தோரணங்கள், வாழைத் தோரணங்கள் என நகர் முழுவதும் காட்சியளித்தன. இது தவிர வானளாவிய பிளக்ஸ் பேனர்கள் என எங்குப் பார்த்தலும் முதல்வரின் உருவங்களே காட்சியளித்தன.

  நாடாளுமன்ற வடிவில் முகப்பு வாயில்: மேடையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே காமராஜர் சாலையில் முதல்வரை வரவேற்று நாடாளுமன்ற வடிவில் அலங்கார முகப்பு அமைக்கப்பட்டிருந்தது.

  அந்த முகப்பு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இது தவிர காந்தி சாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயில் பந்தல் போல காட்சியளித்தது. இது தவிர டி.கே. நம்பி தெரு, டோல்கேட் ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டமான தோரண வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

  சிறப்பு வரவேற்பு: காமராஜர் சாலையில் முதல்வரை வரவேற்கும் வகையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், குதிரை வீரர்கள் அணிவகுப்பு என பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேடைக்கு 500 மீட்டர் தொலைவில் அரசு மகளிர் பள்ளி இருந்ததால், பகல் 1.30 மணி வரை மேள, தாளங்கள், பாடல்கள் ஆகியனவற்றை கட்சியினரே கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.

  ஆடல் பாடல்: முதல்வர் வருகையை முன்னிட்டு, பிரசார மேடை முன்பு 10 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

  கூட்டம் காலை முதலே வரத் தொடங்கியது. பகல் 1 மணிக்கெல்லாம் போடப்பட்ட நாற்காலிகள் நிரம்பி வழிந்தன. அதன்பிறகு வந்த கூட்டங்கள் நாற்காலி போடப்பட்ட பகுதிக்கு 2 புறமும் கூடியது. கூட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடல் - பாடல் நிகழ்ச்சி கூட்டத்தினரை கவர்ந்திருந்தது. கூட்டத்தினருக்கு இரட்டை இலை பொறிக்கப்பட தலை கிரீடம் வழங்கப்பட்டது.

  மேலும் இரட்டை இலை பதாகைகளும் வழங்கப்பட்டிருந்தன. கூட்டணிக் கட்சிகளான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சியினர் தங்களது கொடிகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

   

  இன்று மீனம்பாக்கத்தில் பிரசாரக் கூட்டம்

  ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து மீனம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.

  இதற்கென, மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை அறிமுகம் செய்து பேசுகிறார்.

  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா, தனது இரண்டாம் நாள் தேர்தல் பிரசாரமாக மீனம்பாக்கத்தில் பேசுகிறார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai