"திமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது'
By dn | Published on : 04th March 2014 03:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறினார்.
கடலூரில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் 13,000 மதக் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களில் முஸ்லிம்கள்தான் அதிகம் உள்ளனர். வாக்காளர்களில் 20 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மதரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஒன்றுபட்டு இருக்கின்றனர். ஆனால், அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி அமையுமேயானால், முஸ்லிம்கள் சில காலத்தில் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட்டு விடுவார்கள். இதன் மூலம் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் நிலை ஏற்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. கூட்டணியில் 4 இடங்களில் இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். கூட்டணியில் எங்களுக்கு என 2 தொகுதிகள் கேட்க உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.