Enable Javscript for better performance
தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

    
    jaya

    அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சியில் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசினார்.

    மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவர் பேசியது:

    மத்திய அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தத் தொகையில் 92 சதவீதத் தொகை ஏற்கெனவே வாங்கப்பட்ட ஆயுதங்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. மீதமுள்ள 8 சதவீத நிதி மட்டுமே புதிதாக தளவாடங்களை வாங்குவதற்கு செலவிடும் சூழல் உள்ளது.

    ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும், புதியதாக ஆயுதங்கள் வாங்கவும் ஒதுக்கப்படும் நிதியானது மிக மிகக் குறைவாகும்.

    விமானப் படையை நவீனமயம் ஆக்குவதற்கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் நடக்கும் ஊழல்களைக் களைய ஆயுதங்களை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது.

    அதனால் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கான கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்தால்தான் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

    மேலும், வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்வதை விட, அந்த நாட்டு அரசு மூலமாகச் செய்தால் அது ஊழலை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும். பாதுகாப்புத் துறையில் இவற்றையெல்லாம் செய்யாமல் கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வீணடித்து விட்டது.

    வழிகாட்டியாக விளங்கும் தமிழகம்: சட்டம்-ஒழுங்கு விஷயத்திலும், காவலர்கள் நலனைப் பேணுவதிலும், காவல் துறை நவீனமயமாக்கத்திலும் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அதைப் போன்று மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்திய பாதுகாப்புத் துறை விளங்க தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.

    முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்கப்படும். வல்லரசு நாடுகளுக்கு இணையாக பாதுகாப்புத் துறை பலப்படுத்தப்படும்.

    மேலும், முப்படையினருக்குத் தேவையான அனைத்துச் சலுகைகளையும் செய்து தருவோம்.

    முப்படையினரை ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்கள் ஆர்வத்துடனும், அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரிய வழி வகுக்கும். இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai