பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
By dn | Published on : 04th March 2014 04:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நாயகர் பங்காரு அடிகளாரின் 74-வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இவ்விழாவில் லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அடிகளாரின் பிறந்த நாள் நிகழ்ச்சியை, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் தேதி செவ்வாடை பக்தர்கள் பெரு விழாவாக கொண்டாடுகின்றனர்.
அதேபோல, இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சித்தர் பீடம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ணப் பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சனிக்கிழமை அதிகாலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 4 மணிக்கு கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார். காலை 8 மணிக்கு சித்தர் பிடம் வந்த அடிகளாருக்கு ஆதிபராசக்தி இயக்கத்தின் சார்பில் வரவேற்பும், பாதபூஜையும் செய்யப்பட்டது.
அங்குள்ள கலையரங்கில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த செவ்வாடை பக்தர்கள் அடிகளாருக்கு பொது பாதபூஜை செய்தனர்.
மாலை 3 மணிக்கு, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து தொடர் ஓட்டமாக கொண்டு வரப்பட்ட ஆன்மிக ஜோதிகளுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் வரவேற்பு அளித்தார். மாலை 3.30 மணிக்கு சித்தர் பீட வளாகத்தில் அமைக்கப்பட்ட கலசவிளக்கு, வேள்வி பூஜையை ஆதிபராசக்தி பள்ளிகள் குழுமத்தின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை அடிகளார் அவரது வீட்டிலிருந்து காலை 8 மணிக்கு தங்கரதத்தில் பவனி வந்து சித்தர் பீடம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு ஆன்மிக இயக்க இளைஞர் அணியினர் வரவேற்பும், பாதபூஜையும் அளிக்கப்பட்டது.
கலையரங்கில், காலை 10 மணி முதல் 2 மணி வரை செவ்வாடை பக்தர்கள் குடும்பம் குடும்பமாக அடிகளாருக்கு பாதபூஜை செய்தனர்.
பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி துளசி மோகன்தாஸ், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.தங்கராசு, ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ், பல்கலைக்கழக ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 1509 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிப் பொருள்களையும், உபகரணங்களையும் பங்காரு அடிகளார் வழங்கினார்.
மேலும் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்ற 180 மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், 200 ஏழை எளியோர்களுக்கு ஆடைதானம் வழங்கப்பட்டது. 20 ஏழை மணமக்களுக்கு இலவசத் திருமணங்களை நடத்தி வைத்து, அவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டி, தேவையான வீட்டுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மலர் அலங்கார ரதத்தில் மேளதாளம் முழங்க, பள்ளிமாணவ மாணவிகள், செவ்வாடை மகளிர்கள் நடனமாடியபடி ஊர்வலமாக சித்தர் பீடத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
பக்தர்களுக்கு அன்னதானம், ஐஸ்கிரீம், குடிநீர், குழந்தைகளுக்கு பால், பிஸ்கேட்டுகள், போன்ற உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.