Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் அரசு பஸ் நடத்துனருக்கு கத்திக்குத்து- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசுப் பஸ் நடத்துனரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). பொள்ளாச்சி கோட்டம் 1-இல் அரசுப் பஸ் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார்.

    திங்கள்கிழமை மதியம் 12.50 மணியளவில் பொள்ளாச்சி பஸ் டெப்போவில் இருந்து வழித்தடம் எண் 7-பி பஸ் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிற்குச் சென்று கொண்டிருந்தது. வழியில் சிக்னல் அருகே ஓடும் பஸ்ஸில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். இதைப் பார்த்த நடத்துனர், ஓடும் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திடீரென கத்தியால் நடத்துனரை தாக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த நடத்துனர் பஸ்ஸில் இருந்து கீழே குதித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தினுள் ஓடியுள்ளார்.

    விடாமல் துரத்திச் சென்ற அந்த இளைஞர், சார் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். தலையிலும், கையிலும் பலத்த காயமடைந்த நடத்துனர் செல்வராஜ் கீழே விழுந்துள்ளார். செல்வராஜை பொதுமக்கள், மற்ற அரசுப் பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உதவியுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பொது மக்கள், நடத்துனரை கத்தியால் குத்திய இளைஞர் வெளியே செல்லாதபடி வளாக நுழைவு வாயிலை மூடிவிட்டனர். அரசுப் பஸ் நடத்துனர் கத்தியால் குத்தப்பட்ட தகவல் அறிந்த மற்ற பஸ் ஓட்டுநர்கள் பஸ்ûஸ ஆங்காங்கே நடுரோட்டில் நிறுத்திவிட்டனர். குற்றவாளியைக் கைது செய்யும் வரை பஸ்களை இயக்கமாட்டோம் என்று கூறினர். இதனால், உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோட்டில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. டி.எஸ்.பி. முத்துராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சு நடத்தினர். ஆனால், பேச்சு தோல்வியடைந்தது.

    மதியம் 1.15 மணியில் இருந்து 2.45 மணி வரை அரசு பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம் தொடர்ந்ததால், சட்டப்பேரவை துணைத் தலைவர் ஜெயராமன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தி, உடனடியாக குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. எம்.எல்.ஏ. முத்துக்கருப்பண்ணசாமியும் சம்பவ இடத்துக்கு வந்தார். போலீஸ் விசாரணையில், அரசு பஸ் நடத்துனரை கத்தியால் குத்தியவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாக்கான் என்கிற ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai